பா.ஜ., தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை
பா.ஜ., தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை
பா.ஜ., தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை
ADDED : செப் 06, 2011 01:38 AM
புதுடில்லி: பார்லிமென்டில், பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில்
ஈடுபடுவதை அடுத்து, குஜராத் மாநில லோக் ஆயுக்தா நீதிபதி விவகாரம் தொடர்பாக,
பா.ஜ., தலைவர்களுடன், மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்
வெளியாகியுள்ளது. குஜராத் கவர்னர் கமலா தேவி, முதல்வர் நரேந்திர மோடியை
கலந்தாலோசிக்காமல், லோக் ஆயுக்தா நீதிபதியாக, ஆர்.ஏ.மேத்தாவை நியமித்தார்.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் கவர்னரின் நடவடிக்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., எம்.பி.,க்கள், பார்லிமென்டில் கடந்த சில
நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சபையை நடத்த முடியாத
சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காணும்
நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பார்லிமென்டில் தொடர்ந்து
அமளி ஏற்படுவதால், குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள
மேத்தாவை நீக்குவது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா
சுவராஜ், அருண் ஜெட்லியுடன், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜி ஆகியோர், சில முக்கிய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். லோக்
ஆயுக்தா நீதிபதியை பதவி நீக்குவதற்கு, குஜராத் மாநில காங்கிரசார் எதிர்ப்பு
தெரிவித்தாலும், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சிகளுடன் மோதல் போக்கை
கடைபிடிக்க, மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, இப்பிரச்னைக்கு விரைவில்
தீர்வு காண விரும்புகிறது. இதன்காரணமாகவே, பா.ஜ., தலைவர்களுடன், காங்.,
தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன. இதற்கிடையே, குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும்
எம்.எல்.ஏ.,க்கள், ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து, லோக் ஆயுக்தா நீதிபதி
விவகாரம் தொடர்பாக, மனு அளிக்கவுள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரே மேடையில்: குஜராத்தில் கவர்னர் கமலா தேவிக்கும், முதல்வர் நரேந்திர
மோடிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ஒரு
ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது. குஜராத் மாநிலம் காந்திநகரில், ஆசிரியர்
தினத்தையொட்டி நடந்த விழாவில், கவர்னரும், முதல்வரும் ஒரே மேடையில்
அமர்ந்திருந்தனர்.
முதல்வர் நரேந்திர மோடி பேசுகையில், 'தாயுள்ளம் கொண்ட மேதகு கவர்னர்
அவர்களே' என, கவர்னரை, மரியாதையுடன் அழைத்துப் பேசினார். கவர்னர் கமலா
பேசுகையில், 'மரியாதைக்குரிய முதல்வர் நரேந்திர மோடி அவர்களே' என்றார்.


