Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 42 வகையான பொருட்கள் தயார்

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 42 வகையான பொருட்கள் தயார்

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 42 வகையான பொருட்கள் தயார்

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 42 வகையான பொருட்கள் தயார்

ADDED : அக் 09, 2011 02:13 AM


Google News
தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக் கூடிய 42 வகையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து வாக்குச்சாவடிக்கு தேர்தலுக்கு ஒரிரு நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்படும்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை எவ்வித பிரச்னைக்கும் இடம் கொடுக்காத வகையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் கவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக தினமும் இமெயில் மூலம் பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் மூலம் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் இவை தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் மொத்தம் 42 வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த பொருட்களை ஊரக உள்ளாட்சிகளுக்கு கலெக்டர் அலுவலக உள்ளாட்சி தேர்தல் பிரிவு மூலமாகவும், நகர்புற உள்ளாட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, டவுன்பஞ்சாயத்து அவர்களே உள்ளூரில் கொள்முதல் செய்து கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் இந்த பொருட்கள் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 42 பொருட்கள் வருமாறு;வாக்காளர் அடையாள அட்டை, வரைபட குறியீடு, லாந்தர், மை பாட்டில், பேனா, வாக்குபெட்டி, தான்முத்திரை, செட்டி அட்டை, பசை, முத்திரை அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, முகப்புசீட்டு, முகவரி சீட்டு, துண்டுகம்பி, உலோகமுத்திரை, பாலீத்தின்கவர், துணிப்பை, நாடா, நூல், ஊசி, சாக்கு, வாக்குச்சீட்டு, வாக்குச்சாவடி அடையாள முத்திரை, உலோகச்சட்டம், ஸ்டாம்புபேர்டு மை, அம்புக்குறி முத்திரை, புஸ்சர், அழியா மை, வெள்ளைத்துணி உள்ளிட்ட பொருட்கள் ஆகும். இந்த பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடியில் பயன்படுத்த வேண்டியிருப்பதால் இவை அனைத்தும் போதிய அளவிற்கு வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருமுறை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பொருட்கள் மீதி இருந்தாலும் அடுத்த தேர்தலுக்கு பயன்படுத்த கூடாது என்பதால் இவை அப்படியே ஒரு தேர்தலோடு முடிக்கப்படுகிறது. இது தவிர வாக்குச்சாவடிக்கு தேர்தலுக்குரிய ஆவணங்கள், கையேடுகள் போன்றவையும் கொண்டு செல்லப்படுகிறது. பதட்டம் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வீடியோ பதிவு நடப்பதால் அங்கு கூடுதலான பொருட்கள் கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us