ADDED : செப் 06, 2011 01:26 AM
சேலம்: சேலம் மாநகர போலீஸில், 300க்கும் மேற்பட்ட போலீஸாரை ஸ்டேஷன் களுக்கு
இடையே பணி மாற்றம் செய்து, கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகள்
மாற்றம் செய்யப்பட்டனர். அதையடுத்து, உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள்
பணி மாற்றம் செய்யப்பட்டனர். சேலத்தை பொறுத்த வரை மாஜி அமைச்சர் கைதின்
போது, நடந்த சம்பவங்களால், மாநகர போலீஸில் துணை கமிஷனர் உட்பட, 59 பேர்
அதிரடியாக மாற்றம் செய்ப்பட்டனர். மாநகரில் பல ஆண்டுகளாக பணி செய்து வந்த,
15 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். எஸ்.ஐ.,க்கள்,
எஸ்.எஸ்.ஐ.,க்கள், உட்பட 29 போலீஸாரும் மாற்றம் செய்யப்பட்டனர். சேலம்
மாநகரில் இருந்து திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பணி மாற்றம்
செய்யப்பட்ட ஏட்டுக்கள், போலீஸார் மீண்டும் விழுப்புரம், வேலூருக்கு பணி
மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சேலம் மாநகரில் செயல்படும், 11
போலீஸ் ஸ்டேஷன்கள், மூன்று அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து
பிரிவு, நில அபகரிப்பு மீட்பு குழு, மாநகர மத்திய குற்றப்பிரிவு உட்பட
பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த, 300க்கும் மேற்பட்ட போலீஸார்,
10க்கும் மேற்பட்ட எஸ்.எஸ்.ஐ.,கள் ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, நேற்று முன்தினம் கமிஷனர் சொக்கலிங்கம்
பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீஸார், நேற்று முதல் புதிய
இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


