/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"லென்ஸ்' தேடும் அலுவலர்கள்:பாங்குகளில் திடீர் பரபரப்பு"லென்ஸ்' தேடும் அலுவலர்கள்:பாங்குகளில் திடீர் பரபரப்பு
"லென்ஸ்' தேடும் அலுவலர்கள்:பாங்குகளில் திடீர் பரபரப்பு
"லென்ஸ்' தேடும் அலுவலர்கள்:பாங்குகளில் திடீர் பரபரப்பு
"லென்ஸ்' தேடும் அலுவலர்கள்:பாங்குகளில் திடீர் பரபரப்பு
திருநெல்வேலி:பாங்க் கணக்கு புத்தகங்களில் சிறிய அளவிலான எழுத்துக்களை கண்டறிய கண்ணாடி அல்லது லென்ஸ் தேடும் ஊழியர்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட பாங்குகள் உட்பட அனைத்து பாங்குகளிலும் வாடிக்கையாளர்களை கவர விவசாய கடன், நகை கடன், டெபாசிட்களுக்கு அதிக வட்டி, கல்விக் கடன், ஏ.டி.எம் வசதிகள், மொபைல் ஏ.டி.எம்கள் உட்பட பல்வேறு நவீன வசதிகள், புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாங்குகளில் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை, போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்று ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க்கை பொறுத்தவரை இந்தியா முழுவதும் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்த பாங்க் செயல்பட்டு வருகிறது. இதில் பாங்க் வாடிக்கையாளர் கணக்கு புத்தகங்கள் மும்பையில் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு பாங்க் கிளைகளுக்கும் அனுப்பபட்டு வருகிறது.
இதில் கடந்த சில நாட்களாக இந்த கணக்கு புத்தகங்களில் பெயர், முகவரி, பாங்க் கணக்கு எண், பணம் செலுத்துதல், பணம் எடுத்துதல், வட்டி விபரம் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பாங்க் அதிகாரிகளும், ஊழியர்களும் திணறி வருகின்றனர்.ஏனெனில் இதுகுறித்த விபரங்கள் மிகவும் சிறிய அளவில் கண்களுக்கு தெரியாத வகையில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர்.
ஒரு சில பாங்குகளிலும் இதே போன்ற சூழ்நிலை தொடர்வதால் ஏதாவது அதிகாரிகள் விபரங்களை கேட்டால் உரிய முறையில் பதில்களை கூற முடியாத நிலையில் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பாங்குகள் தரப்பில் கேட்ட போது, ''வாடிக்கையாளர்களின் பாங்க் கணக்கு புத்தகங்களில் மிகவும் சிறிய அளவில் விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த கணக்கு புத்தகங்களில் விபரங்களை சரி பார்க்க கண்ணாடி அணிய வேண்டும். இல்லையெனில் லென்ஸ் மூலம்தான் இந்த விபரங்களை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாங்குகளில் பணியாற்றும் ஒவ்வொரு அலுவலருக்கும் லென்ஸ் வழங்கினால்தான் இந்த விபரங்களை நன்கு சரி பார்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். விரைவில் இந்த குறைபாடுகள் களையப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
எனவே, தேசிய மயமாக்கப்பட்ட பாங்குகளில் பாங்க் நடைமுறைகளை அனைவரும் எளிய முறையில் பின்பற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவும், பாங்க் கணக்கு புத்தகங்களில் கம்ப்யூட்டர் மூலம் அச்சிடும் விபரங்களை பெரிய அளவில் தெரியும் வகையில் வெளியிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.


