ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளியில், ரங்கோலி மற்றும் ஓவியக் கண்காட்சி நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகளின் தனித் திறமையை வளர்ப்பதற்கும், வெளிப்படுத்துவதற்கும் ரங்கோலி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு, சர்வதேச வனம் மற்றும் வேதியியல் ஆண்டு என பல்வேறு தலைப்புகளை மையப்படுத்தி, ஓவியப் போட்டி நடந்தது. இதில், ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
ரங்கோலி ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பல வண்ணப் பொடிகள், மலர்கள், வண்ணமேற்றிய உப்புக் கல் போன்ற பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி கண்ணைக் கவரும் வகையில் ரங்கோலி வரைந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான 1200 ஓவியங்கள், 15 ரங்கோலி ஓவியங்கள் பெற்றோர்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டன. மேலும், மாணவிகள் தங்கள் பாடம் தொடர்பாக தயாரித்த திட்ட அறிக்கை மற்றும் விளக்கப் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. பள்ளி முதல்வர் எமிலியானா, கண்காட்சியைத் துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, ஓவிய ஆசிரியை ஜெயந்தி செய்திருந்தார். சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.


