Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குவிந்தன கோரிக்கை மனுக்கள்; அதிகாரிகள் திணறினர்

குவிந்தன கோரிக்கை மனுக்கள்; அதிகாரிகள் திணறினர்

குவிந்தன கோரிக்கை மனுக்கள்; அதிகாரிகள் திணறினர்

குவிந்தன கோரிக்கை மனுக்கள்; அதிகாரிகள் திணறினர்

ADDED : ஆக 22, 2011 11:25 PM


Google News

திருப்பூர் : கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில் 400க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க குவிந்தனர்; அம்மனுக்களைப் பெறுவதற்கு அதிகாரிகள் திணறினர்.

மக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வழக்கத்தைவிட, அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மனுப்பெறும் நிகழ்ச்சி துவங்க தாமதம் ஆனதாலும், அதிக கூட்டத்தாலும், கலெக்டர், டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ, ஆகியோர் மனுக்களை பெற்றனர். கூட்டம் நெருக் கியதால், மனு அளிக்க வந்தவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளினர்; வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. அரங்கில் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜைக்கு முன்பும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் குழப்பம் நிலவியது. * பல்லடம், பெத்தாம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை; அக்கடையை உரிய நேரத்தில் திறப்பதில்லை; இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கருப்பையா என்பவர், தேசியக்கொடியை ஒரு குச்சியில் கட்டி எடுத்து வந்து புகார் செய்தார். * மாவட்ட சிவசேனா சார்பில் அளித்த மனுவில், 'விநாயகர் சதுர்த் திக்கு சிலைகள் அமைத்தல் , ஊர்வலப் பாதை என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதை தளர்த்த வேண்டும். இல்லையெனில், உண்ணாவிரதம் நடத்தப்படும்,' என்று கூறப்பட்டுள்ளது. * இந்து முன்னணி சார்பில் அளித்த மனுவில், 'விவசாயிகள் பயன் பெறும் வகையில் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்; விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்காக செப்., 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்,' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. * பூண்டி துரைசாமி நகரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனு: பூண்டி பகுதியில் உள்ள சிற்பசாலைகளுக்கு கற்கள் கொண்டு வரும் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதால் இடையூறு ஏற்படுகிறது. கிரைண்டிங் செய்யும்போது ஏற்படும் தூசி, துரைசாமி நகரில் உள்ள காம்பாக்டிங் நிறுவனம் வெளியிடும் பாய்லர் புகை, குடியிருப்பு பகுதிகளில் பரவி, கேடு விளைகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். * 'டி.எஸ்.ஆர்., லே-அவுட்டில் உள்ள ரேஷன் கடையில் 1,700 கார்டுகள் உள்ளன. இக்கடையை இரண்டாக பிரிக்க வேண்டும்,' என, மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. * பொங்குபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: கடந்த எட்டு மாதங்களாக பொங்குபாளையம் பகுதியில் இரண்டு மெட்டல் ரோலிங் மில்கள் இயங்கி வருகின்றன. ஊராட்சி மன்றம், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறாமல் இயங்குகின்றன. விதியை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு ஊராட்சி மன்றம் தடை பிறப்பித்தும், தொடர்ந்து இயங்கி வருகின்றன. * வெள்ளகோவில், சொரியங்கணத்துப்பாளையத்தை சேர்ந்த 105 பேர் திரண்டு வந்து அளித்த மனுவில், 'வெள்ளகோவில் நகராட்சியில் வசிக்கும் நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோம். எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 60 பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்களும் அதே நிலையில் உள்ளோம். எங்களை அப்பட்டியலில் சேர்க்க வேண்டும்,' என்று கூறியுள்ளனர். * அணிக்கடவு ஊராட்சி உறுப்பினர் ரங்கன் அளித்த மனு: குடிமங்கலம், அணிக்கடவு ஊராட்சி நஞ்சேகவுண்டம்புதூர் - மஞ்சமாதா கோவில் இடையேயான 5.5 கி.மீ., ரோடு 3.5 கி.மீ., தூரம் தார்ரோடாக உள்ளது. மீதமுள்ள 2 கி.மீ., தூரம் தார் ரோடு போடப்படும் என சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு, பல்வேறு தரப்பினர் மனுக்கள் அளித்தனர்.

மயங்கி விழுந்த பெண்: குறைகேட்பு கூட்டம் துவங்குவதற்கு முன், காங்கயத்தை சேர்ந்த மூவருக்கு முதியோர் உதவித்தொகை, மூவருக்கு விதவை உதவித்தொகைக்கான உத்தரவுகளை கலெக்டர் மதிவாணன் வழங்கினார். பின், கூட்டரங்கிற்குள் நுழைய முயன்றபோது, மனு அளிக்க வந்த விஜயாபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற வயதான பெண், கையில் கோரிக்கை மனுவுடன் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். அவர் கையிலிருந்த மனுவை பார்த்த கலெக்டர் மதிவாணன், அதை அதிகாரிகளிடம் கொடுத்துநடவடிக்கை எடுக்க கூறிவிட்டு, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். இனி, மாதந்தோறும் ஆய்வு அதிகாரிகள் மத்தியில், கலெக்டர் பேசியதாவது:

வாரந்தோறும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக அளிக்கப்படும் மனுக்கள் குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். திங்கட்கிழமை பெறப்படும் மனுக்கள் மீது நான்கு நாள் அவகாசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை குறித்த அறிக்கையை வியாழக்கிழமை துறை வாரியான மாவட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாதத்தின் முதல் திங்கட்கிழமை துறை வாரியாக மாவட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கும். அக்கூட்டத்தில், கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதது குறித்தும், கோரிக்கையின் தன்மை, விண்ணப்பதாரருக்கு தகுதி இல்லையா, எதனால் மனு நிராகரிக்கப்படுகிறது என்ற விளக்கமும் தெரிவிக்க வேண்டும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us