Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் 450 ஆண்டு பழமையான தேக்குமரம்

பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் 450 ஆண்டு பழமையான தேக்குமரம்

பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் 450 ஆண்டு பழமையான தேக்குமரம்

பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் 450 ஆண்டு பழமையான தேக்குமரம்

ADDED : ஜூலை 25, 2011 09:45 PM


Google News

ஆனைமலை : பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் பகுதியில் 450 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 'கன்னிமாரா' தேக்குமரம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 39 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதில் பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் ஒன்று. கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த காப்பகம் வனவிலங்குகளின் சிறந்த வாழிடமாக உள்ளது. பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் 643 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 85 சதுர கிலோமீட்டர் தேக்கு மரங்களால் ஆனது. பரம்பிக்குளம் வனப்பகுதியில் இயற்கையாகவே தேக்குமரங்கள் அதிகமாக இருந்ததால் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேக்குமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதில் கன்னிமாரா தேக்குமரத்தை வெட்டாமல் விட்டு விட்டனர். இந்த தேக்குமரத்தை மலைவாழ் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இதற்கு மலைவாழ் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

இந்த மரம் 48.5 மீட்டர் உயரமும், 7.02 மீட்டர் சுற்றளவும் கொண்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 3.8 கோடி ரூபாய், 450 ஆண்டுகள் இந்த மரம் சுற்றுச்சூழலுக்கு தந்த பயன்கள் உட்பட மறைமுக மதிப்பு 6 கோடி ரூபாய் என மொத்த மதிப்பு 9.8 கோடி ரூபாயாக வனத்துறையால் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கன்னிமாரா தேக்குமரத்தின் விதைகளின் நாற்றுக்கள் பரம்பிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப் பண்ணையில் விற்பனை செய்ய வனத்துறை முடிவுசெய்துள்ளது. இந்த மரத்திற்கு மத்திய அரசால் 1994ம் வருடம் 'மகாவிருக்ஷா புரஸ்கார்' என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் வருபவர்கள் இம்மரத்தை பார்ப்பதை பெரிதும் விரும்புகின்றனர். பரம்பிக்குளம் புலிகள் காப்பக வன உயிரின காப்பாளர் விஜயானந்தன் கூறும்போது, ''கன்னிமாரா தேக்குமரத்தால் எங்கள் புலிகள் காப்பகம் பெருமையடைந்துள்ளது. தற்போது இதன் விதைகளை சேகரித்து பரம்பிக்குளம் பகுதியில் உள்ள நாற்றுப் பண்ணையில் நாற்று உருவாக்க முடிவெடுத்துள்ளோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us