மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

ஐதராபாத் : 'எங்கள் ராஜினாமாவை, சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டதால், மீண்டும் ஒருமுறை ராஜினாமா கடிதம் கொடுப்பது என, முடிவு செய்துள்ளோம்'என, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அறிவித்துள்ளனர்.
'ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்'என, தெலுங்கானா பகுதி மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை, மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. இதையடுத்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், இம்மாத துவக்கத்தில், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களை, சபாநாயகர் நாதெந்துலா மனோகரிடம் அளித்தனர்.
இந்த மனு மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைதி காத்து வந்த சபாநாயகர், நேற்று முன்தினம் இரவு, காமன்வெல்த் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, லண்டன் புறப்பட்டார். அதற்கு சில மணி நேரம் கழித்து, சட்டசபைச் செயலர் ராஜா சதாராம், ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்,'தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.,க்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையில், ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர். எனவே, அவர்களின் ராஜினாமாவை ஏற்க முடியாது'என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ராஜினாமா: இந்த விவகாரம், தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ,க்களிடையே, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் அவசரக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், ராஜினாமாவை ஏற்க மறுத்த, சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில், ஆந்திர மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், தங்களது ராஜினாமா கடிதங்களை, மீண்டும் ஒருமுறை கொடுப்பது என, முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும், சம்மதம் தெரிவித்துள்ளார்.