மூன்று பெண்களுக்கு உலக அமைதிக்கான நோபல்
மூன்று பெண்களுக்கு உலக அமைதிக்கான நோபல்
மூன்று பெண்களுக்கு உலக அமைதிக்கான நோபல்
ADDED : அக் 07, 2011 10:30 PM

ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசு, இந்தாண்டு மூன்று பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள, லைபீரியா நாட்டவர். ஒருவர் ஏமன் நாட்டவர். நார்வே தலைநகர் ஆஸ்லோவில், இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆப்ரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில், அமைந்துள்ள லைபீரிய நாட்டின் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா போவீ மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவாக்குல் கர்மான் ஆகிய மூன்று பேருக்கு, இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் லைபீரிய நாட்டவரான லேமா போவீ, அந்நாட்டில் நடந்து வந்த, இரண்டாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றினார். அவரது அமைதி இயக்கம், உள்நாட்டுப் போரை 2003ல் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பலனாக, அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதிபராக எல்லன் ஜான்சன் சர்லீப், 72, என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். லைபீரியாவிலும், ஆப்ரிக்காவிலும் முதன் முறையாக அதிபரான பெருமை சர்லீப்புக்குக் கிடைத்தது.
ஏமன் நாட்டில், தற்போது நடந்து வரும் அதிபருக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார் தவாக்குல் கர்மான், 32. பத்திரிகையாளரான இவர், 'உமன் ஜர்னலிஸ்ட்ஸ் வித்தவுட் செயின்ஸ்' என்ற மனித உரிமை அமைப்பை நடத்தி வருகிறார். இவரது தந்தை, சலேயின் ஆட்சியில், சட்ட அமைச்சராக இருந்தவர்.


