Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விலைவாசி உயர்வுக்கேற்ப கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

விலைவாசி உயர்வுக்கேற்ப கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

விலைவாசி உயர்வுக்கேற்ப கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

விலைவாசி உயர்வுக்கேற்ப கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

ADDED : ஆக 30, 2011 12:46 AM


Google News
திருப்பூர் : விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நியாயமான கூலி உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மங்கலம் சுற்றுப்பகுதி விசைத்தறி தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர்.

இப்போராட்டத்தால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும்.விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பொதுக்கூட்டம், மங்கலம் நால்ரோட்டில் நடந்தது. தொழிற்சங்கங்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில், விசைத்தறி தொழில் நிலவரம் குறித்தும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.அப்போது, 'கடந்த 2008ம் ஆண்டு கூலி உயர்வு செய்யப்பட்டது; அதன் பின், கடுமையாக விலைவாசி உயர்ந்துள்ளதால், உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும். நியாயமாக கூலி உயர்வு வழங்கும் வரை, தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது,' என முடிவு செய்யப்பட்டது.விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் (சி.ஐ.டி.யு.,) முத்துசாமி கூறியதாவது:கடந்த 2008ம் ஆண்டுக்கு பின், விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது. பொதுவாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூலி நிர்ணயம் செய்யப்படுவதில்லை. விலைவாசி புள்ளிவிவர அடிப்படையில் கூலி உயர்வு கோரப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒருமுறை கூலியை உயர்த்தி பெறுவது வழக்கமாகி வருகிறது.சாதாரணமாக, எட்டு மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு, 300 முதல் 350 ரூபாய் வரை தினக்கூலி கிடைக்கிறது. தினமும் 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளருக்கு 200 ரூபாய் கிடைப்பதே பெரிய விஷயமாகி விடுகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலியை சேர்த்து கொடுத்தால், தொழிலாளர்களும் கூலி உயர்வு பெற வசதியாக இருக்கும்.கூலி உயர்வு கிடைக்காததால், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்ட 'அட்வான்ஸ்' தொகை, தற்போது 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மொத்தமாக பெறப்படும் 'அட்வான்ஸ்' தொகையை திருப்பி அடைக்க முடியாமல், தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய விலைவாசி உயர்வால், சம்பளம் வாங்கி குடும்பம் நடத்துவதே பெரிய சவாலாக உள்ளது. இதில், 'அட்வான்ஸ்' கடனை திருப்பி அடைப்பது கேள்விக்குறியாகிறது.விசைத்தறி தொழிலை பொறுத்தவரை, புதிய தொழிலாளர்கள் வருகை இல்லை. இத்தொழிலில் நுழைந்துள்ள வெளிமாவட்ட மக்கள், இதில் ஏற்படும் கஷ்டத்தை எடுத்துரைத்து, புதிதாக வருவோரை வேறு தொழி லுக்கு மாற்றி விடுகின்றனர். இதனால், வருங்காலங்களில், விசைத்தறி தொழிலுக்கு, தொழிலாளர்கள் கிடைக்காமல் சீரழிய வேண்டிய நிலை ஏற்படும்.கூலி உயர்வு கிடைத்தால் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும் என்பதால், விசைத்தறி தொழிலாளர்கள் இன்று (நேற்று)முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், மங்கலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள 25 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறியாளர் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தொழிலாளர்கள் கூலி உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us