
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களும், உரிமையாளர்களும், 30ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: ஓ... அதான் உங்க பிரச்னையா...? ஒரு பெரிய போராட்டமே நடந்துட்டு இருக்கு... அதுல நம்ம பங்களிப்பு எதுவுமே இல்லையேன்னு வருத்தமாக்கும்... தொழிலாளர்களுக்காகவே கட்சி நடத்துறதா சொல்லிட்டு, ரெண்டு தரப்புமே நம்மை புறக்கணிக்கும்போது அப்படித்தான் இருக்கும்...!
தி.மு.க., தலைவர் கருணாநிதி: தமிழக அரசுக்கு தி.மு.க., அறக்கட்டளை அனுப்பிய கடிதத்தில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட இடத்துக்குப் பதிலாக, அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இடம் ஒதுக்கித் தர அனுமதிக்கும்படி கேட்டதற்கு, தமிழக அரசு, 1998ல் அனுமதியும் கொடுத்தது.
டவுட் தனபாலு: என்னது...? 1998ல் தமிழக அரசு அனுமதி கொடுத்துச்சா...? அப்போ உங்க ஆட்சி தானே நடந்துட்டு இருந்தது...? நீங்களே அனுமதி கேட்டு, நீங்களே அனுமதி கொடுத்துக்கிறதுக்குப் பேர் தான் விளக்கமா...? நல்லா இருக்கே உங்க நியாயம்...!
தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு: ரவுடிகள் மேல் பயன்படும் சட்டத்தை, தி.மு.க.,வினர் மீது பயன்படுத்தப்படுவது சரியானது அல்ல. தமிழகத்தில் நடைபெறும் போலீஸ் ராஜ்ஜியத்தை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என, ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தோம். கோரிக்கை குறித்து உரிய முறையில் ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
டவுட் தனபாலு: எதுக்குங்க ஜனாதிபதிக்கிட்ட போய் மனு கொடுக்கறீங்க... அவங்க, 11 வருஷம் நாலு மாசம் ஆலோசனை பண்ணி, அப்புறம் ஏதாவது உத்தரவு போடுவாங்க... அப்புறம், அதை மாத்துறதுக்காக நாம போராடணும்... இதெல்லாம் கதைக்கு ஆகுற விஷயமா...?


