/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கும்பாபிஷேக பணியில் முறைகேடா? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுகும்பாபிஷேக பணியில் முறைகேடா? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
கும்பாபிஷேக பணியில் முறைகேடா? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
கும்பாபிஷேக பணியில் முறைகேடா? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
கும்பாபிஷேக பணியில் முறைகேடா? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2011 10:11 PM
பேரூர் : பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதா
என்பது குறித்து அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். கடந்த ஆண்டு,
நவம்பர் 12ல், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நன்கொடையாளர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக,
மூன்று கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பீட்டில், திருப்பணிகள்
மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகவிழா வெகுசிறப்பாக நடந்தது.
கோவிலின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், விமானம், ராஜகோபுரம், கருவறை,
கனகசபை மண்டபம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்பணிகள் நடந்தன. பலகோடி
செலவில், நடந்த இத்திருப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார்
அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்து அறநிலையத்துறை உதவி
கமிஷனர் ஆறுமுகம், பழநி திருக்கோவில் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர்
நேற்று காலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து, திடீர் விசாரணை
நடத்தினர். மேலும், கும்பாபிஷேக திருப்பணியின் போது, அப்போதைய கோவில்
நிர்வாக அதிகாரியாக இருந்த முரளிதரன், தற்போதைய கோவில் நிர்வாக அதிகாரி
ஜீவானந்தம் ஆகியோரிடம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர். கோவிலில்
மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்து, ஒவ்வொரு பகுதியாகச் சென்று
நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு நடத்தினர். ஆய்வின் இறுதியில், திருப்பணிகள்
நடைபெற்றதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள்
மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது. இதனால், கோவில் திருப்பணி
ஊழியர்களிடையே நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பேரூரைச் சேர்ந்த ஒருவர்
கூறுகையில், 'கோவில் திருப்பணியின்போது, ஓரிரு இடங்களில் மட்டும் வயரிங்
பணிகள் செய்து விட்டு, முழுமையாக நடந்துள்ளதாகவும், ஒரே மாதத்தில்,
ஒன்றேகால் கோடிக்கு திருப்பணி நடந்துள்ளதாகவும் கணக்கு காட்டப்ட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது பல்வேறு புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'
என்றார்.


