Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"அனுபவ'சாலிகளுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு :உள்ளாட்சி "சீட்' பிடிக்க போட்டாபோட்டி

"அனுபவ'சாலிகளுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு :உள்ளாட்சி "சீட்' பிடிக்க போட்டாபோட்டி

"அனுபவ'சாலிகளுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு :உள்ளாட்சி "சீட்' பிடிக்க போட்டாபோட்டி

"அனுபவ'சாலிகளுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு :உள்ளாட்சி "சீட்' பிடிக்க போட்டாபோட்டி

ADDED : ஜூலை 13, 2011 10:12 PM


Google News
கோவை : கவுன்சிலர் பதவி சுகத்தை அனுபவித்து, வசதி, வாய்ப்புப் பெற்றவர்களுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில், முக்கியக்கட்சிகள் வாய்ப்பு தரக்கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில், முந்தைய ஆளும்கட்சியின் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் போட்ட ஆட்டமும், தி.மு.க.,வின் படுதோல்விக்கு ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களைக் கட்டுப்படுத்தவோ, கடிவாளம் போடவோ கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய, மாநில அமைச்சர்கள் செய்த அத்துமீறல், ஊழல்களை விட, ஏழை மக்களை நேரடியாகப் பாதித்ததும், அதிருப்தி அடைய வைத்ததும் இந்த கவுன்சிலர்கள் போட்ட ஆட்டம்தான். குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சில கவுன்சிலர்கள் அடைந்துள்ள, 'அசாத்திய வளர்ச்சி' அந்தந்த கட்சிகளின் மீதே மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில், தி.மு.க.,வில் 32 கவுன்சிலர்கள் இருந்தாலும் அதிகம் சம்பாதித்ததும், ஆதிக்கம் செலுத்தியதும் 10க்கும் உட்பட்ட கவுன்சிலர்கள்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள், இரண்டு அல்லது மூன்று முறை கவுன்சிலர்களாக இருந்தவர்கள் அல்லது இவர்களின் குடும்ப உறுப்பினருக்குப் பின், அதே வார்டுகளில் நின்று ஜெயித்தவர்கள். துணை மேயர் கார்த்திக்கைத் தவிர, எதிர்க்கட்சித் தலைவர் உதயகுமார், மண்டலத் தலைவர்கள் சாமி, செல்வராஜ், நிலைக்குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாச்சிமுத்து, நந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்று முறை கவுன்சிலர்களாக பதவி வகித்துள்ளனர். கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் மனைவி, ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர்.கடந்த கவுன்சிலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கு.ப. ஜெகநாதனின் மருமகள்தான், தற்போதைய கணக்குக் குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி. தி.மு.க.,வில் இந்த நிலை என்றால், காங்., நிலைமை, இதை விட அமோகம். மேயர் வெங்கடாசலம், மூன்றாவது முறையாக கவுன்சிலரானவர். இடைத்தேர்தலில் அவரது மக ளையும் கவுன்சிலராக்கி விட்டார். தனது மனைவி ஜெயித்த அதே வார்டில், மீண்டும் கவுன்சிலரான திருமுகம்தான், இப்போதைய ஆளும்கட்சித் தலைவர். மா.கம்யூ., குழுத்தலைவர் பத்மநாபன், மூன்றாவது முறை கவுன்சிலரானவர். பா.ஜ., கட்சியின் ஒரே கவுன்சிலரான கோமதி, அவ ரது கணவர் கவுன்சிலராக இருந்தே அதே வார்டில் வெற்றி பெற்றவர். அ.தி.மு.க., குழுத் தலைவரான ராஜ்குமாரும், ஏற்கனவே மண்டலத்தலைவர் பதவியை வகித்துள்ளார். பிரபாகரனும், இரண்டாவது முறையாக கவுன்சிலரானவர்தான். மாநகராட்சியில் மட்டுமின்றி, நகரைச் சுற்றிலும் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மீண்டும் மீண்டும் பதவி சுகத்தையும், அதிகாரத்தையும் அனுபவிக்கின்றனர். குறிச்சி நகராட்சித் தலைவர் (தி.மு.க.,) பிரபாகரனுக்கு முன், அப்பதவியில் இருந்தவர் அவரது தந்தை நாகராஜ். குனியமுத்தூர் நகராட்சித் தலைவர்(காங்.,) துளசிமணிக்கு முன்பாக, அப்பொறுப்பில் இருந்தவர் அவரது கணவர் செல்வராஜ். கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவரான சுந்தரம் (தி.மு.க.,), ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர்தான். வடவள்ளி பேரூராட்சியில், தொடர்ந்து 15 ஆண்டுகளாக தலைவர் பதவியைத் தக்க வைத்து இருப்பவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த சண்முகசுந்தரமும், அவரது மனைவியும். வெள்ளலூர் பேரூராட்சித் தலைவராக இப்போது இருப்பவர் பாலசுப்ரமணியம் (காங்.,); இதற்கு முன்பாக இருந்தவர், அவரது மனைவி புஷ்பரத்தினம். பிற உள்ளாட்சிகளிலும் கூட, இதே நிலைதான். இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக, இவர்களும், இவர்களின் குடும்பமும் எந்த நிலையில் இருந்தன, இப்போது இவர்கள் பெற்றுள்ள 'வளர்ச்சி' என்ன என்பது ஊரறிந்த ரகசியம். இவர்களில் சிலர், விதி விலக்காக பதவியைப் பயன்படுத்தி, வார்டு மக்களுக் கும் நல்லது செய்திருக்கின்றனர். மீண்டும் மீண்டும் உள்ளாட்சிப் பொறுப்புக்கு வருபவர்களே, எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு, நிர்வாகத்தை தங்கள் போக்குக்கு வளைத்து, ஊழலுக்கு வழி வகுக்கின்றனர். இவர்களால்தான், பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளன. வரும் தேர்தலிலும் 'சீட்' பிடிப்பதற்கான வேலைகளை இவர்கள் துவக்கி விட்டனர். மறுபடியும் இவர்களுக்கு வாய்ப்பு அளித்தால், திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும், 'விழலுக்கு இறைத்த நீராக' இவர்களை வளப்படுத்தவே உதவும். புதுமுகங்கள் வந்தால் புத்துயிர் பெறும் புதியவர்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தால், அவர்கள் கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் செயல்படுவர். இல்லாவிட்டாலும், உள் ளாட்சி அமைப்பின் நிர்வாகத்தைப் பற்றியும், சம்பாதிப்பது பற்றியும் தெரிந்து கொள்ளவே பல மாதங்களாகும். அதுவரையிலுமாவது, நிர்வாகம் சீராக நடக்கும். எனவே, ஏற்கனவே உள்ளாட்சிப் பதவிகளை அனுபவித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு; இதை நிறைவேற்றும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us