காணாமல் போன டார்ஜிலிங் பெண்கள் திருப்பூரில் மீட்ட ஊட்டி போலீசார்
காணாமல் போன டார்ஜிலிங் பெண்கள் திருப்பூரில் மீட்ட ஊட்டி போலீசார்
காணாமல் போன டார்ஜிலிங் பெண்கள் திருப்பூரில் மீட்ட ஊட்டி போலீசார்
ADDED : ஜூலை 26, 2011 12:38 AM
ஊட்டி : வேலை தேடி டார்ஜிலிங்கில் இருந்து ஊட்டி வந்து, காணாமல் போன இளம்பெண்கள் திருப்பூரில் மீட்கப்பட்டனர்.
டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர்கள் தவக்குட்டி,20, மற்றும் அஞ்சு சாராய்,26. தவக்குட்டியின் சகோதரி பசங்லாமா, ஊட்டி திபெத்தியன் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தவக்குட்டி, அஞ்சு சாராய், பசங்லாமாவுடன் வேலை செய்ய, ஊட்டி வந்துள்ளனர். ஊட்டியில் பசங்லாமாவுடன் தங்கி பணிபுரிந்து வந்தபோது, சகோதரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில், கோபித்துக் கொண்டு தவக்குட்டி, அஞ்சு சாராய், டார்ஜிலிங்கே சென்று விடுவதாகக் கூறி, கடந்த 10ம் தேதி ஊட்டியில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
தவக்குட்டி மற்றும் அஞ்சு சாராய் இருவரும் டார்ஜிலிங் வரவில்லை என, பசங்லாமாவுக்கு, கடந்த 14ம் தேதி தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, இருவரையும் காணவில்லை என, ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில், பசங்லாமா புகார் கொடுத்துள்ளார்.
புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார், தவக்குட்டியின் செல்போன் சிக்னலை டிராக் செய்தபோது, அந்த செல்போன் திருப்பூரில் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து எஸ்.ஐ., ஜெயம்மா மற்றும் போலீசார் திருப்பூர் சென்றபோது, புது திருப்பூரில் தவக்குட்டி, அஞ்சு சாராய் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷானு, பூரண் ஆகியோருடன் தங்கி பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. எஸ்.ஐ., ஜெயம்மா மற்றும் போலீசார் நான்கு பேரையும் ஊட்டி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். 'பெற்றோர் வந்தவுடன் இவர்களின் பிரச்னைகளுக்கான முடிவு தெரியவரும்' என கூறப்பட்டது.