கணவன் கொலை : மனைவி, குழந்தைகள் ஓட்டம்
கணவன் கொலை : மனைவி, குழந்தைகள் ஓட்டம்
கணவன் கொலை : மனைவி, குழந்தைகள் ஓட்டம்
UPDATED : ஆக 06, 2011 07:02 PM
ADDED : ஆக 06, 2011 06:50 PM
அன்னூர் : கணவன் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் தலைமறைவாகியிருக்கும் சம்பவம், கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்த விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (47). கேபிள் டிவி நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் முருகனுக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளது. குடித்துவிட்டு தன்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக ஸ்டெல்லா, 2ம் தேதி போலீசிடம் புகார் செய்தார். இதனையடுத்து, 3ம் தேதி, போலீசார், முருகனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக, முருகனின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று அவ்வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் போலீசிடம் புகார் செய்தனர். கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பையா பிள்ளை, கிராம நிர்வாக அலுவலர் சிவசண்முகம் உள்ளிட்டோர் அடங்கிய குழு, முருகனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு, முருகன் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அவரது கழுத்தில் 2 சேலைகள் சுற்றப்பட்டிருந்தது. சுவற்றில் ரத்தம் தெறித்திருந்தது. இந்நிலையில், மனைவி ஸ்டெல்லா மற்றும் குழந்தைகளும் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்த துரித விசாரணையில் போலீசார் களமிறங்கியுள்ளனர். தலைமறைவானவர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


