/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்தியாவை வளப்படுத்த ஒன்றுபடுங்கள்!கோவையில் ஆதரவாளர்கள் முழக்கம்இந்தியாவை வளப்படுத்த ஒன்றுபடுங்கள்!கோவையில் ஆதரவாளர்கள் முழக்கம்
இந்தியாவை வளப்படுத்த ஒன்றுபடுங்கள்!கோவையில் ஆதரவாளர்கள் முழக்கம்
இந்தியாவை வளப்படுத்த ஒன்றுபடுங்கள்!கோவையில் ஆதரவாளர்கள் முழக்கம்
இந்தியாவை வளப்படுத்த ஒன்றுபடுங்கள்!கோவையில் ஆதரவாளர்கள் முழக்கம்
UPDATED : ஆக 22, 2011 02:50 AM
ADDED : ஆக 22, 2011 12:03 AM
கோவை : ''இந்தியாவை வளப்படுத்த, ஒன்றுபட்டு செயல்படுங்கள்,'' என, 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ் அரிகிருஷ்ணா பேசினார்.
ஊழலுக்கு எதிராக வலுவான 'ஜன் லோக்பால்' மசோதாவை நிறைவேற்றக்கோரி, டில்லியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. கோவையில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பு சார்பில் நேற்று மாலை சிவானந்தா காலனியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. தேசிய கொடிகள் ஏந்தியபடி ஏராளமானோர், ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற, 'ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ் அரிகிருஷ்ணா பேசியதாவது: இந்தியாவை இருநூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, 'வெள்ளையனே வெளியேறு' என்ற குறிக்கோளுடன் காந்தி குரல் கொடுத்தார். ஆனால் இப்போது தேசத்தையே பாழ்படுத்தி கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிராக 'கொள்ளையனே வெளியேறு' என்ற குரல் கொடுக்க 74 வயதில் காந்தியவாதியான அன்னா ஹசாரே களம் இறங்கி விட்டார். அவரது குறிக்கோள் ஊழலுக்கு எதிராக 'ஜன் லோக்பால் மசோதா' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான். ஆனால், பல காரணங்களை கூறி மசோதா நிறைவேறுவதில் தாமதப்படுத்துகின்றனர். தேசத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து ஊழலுக்கு எதிரான மசோதா நிறைவேற பாடுபடவேண்டும். 64 ஆண்டுகளாக இந்தியாவை வழி நடத்த நல்ல தலைவர் இல்லாத சூழ்நிலையில், அன்னா ஹசாரே இப்போது வழி நடத்தி வருகிறார். இளைஞர்களை நம்பியுள்ள எதிர்கால இந்தியாவை வளப்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். இவ்வாறு அரிகிருஷ்ணா பேசினார். பொதுக்கூட்டத்தில், நடன நிகழ்ச்சிகளுடன், தனி மற்றும் குழு பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஊழலுக்கு எதிரான கோவை இயக்கத்தினர், பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். டில்லியில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவை சந்திக்கவும், அவருடன் இணைந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்கவும், கோவையில் இருந்து 25 பேர் இன்று புறப்பட்டு செல்கின்றனர்.


