PUBLISHED ON : அக் 09, 2011 12:00 AM

கிண்டலடிக்கிறார் பிரணாப்?
வைகைவளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'எனக்கு ஞாபகமறதி கொஞ்சம் அதிகம்.
கணக்கிலும் கொஞ்சம் வீக்' என, தன்னைப் பற்றி சுய விமர்சனம் செய்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருக்கும் சிதம்பரம்.எப்போதெல்லாம் தனக்கு சங்கடங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் அதிலிருந்து தப்பிக்க, அரசியல்வாதிகள் இந்த மாதிரி மழுப்பல் பதில்களை தெரிவிப்பது சகஜம். உள்துறை அமைச்சகத்திற்கு, இப்படியொரு ஞாபகமறதி மன்னரை நியமித்திருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல், வியப்பைத் தருகிறது.போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல், நாட்டில் வெடிகுண்டுகள் வெடித்தாலும், 'வெடிகுண்டு வெடித்தது தனக்கு ஞாபகத்தில் இல்லை' என்று, சிதம்பரம் அண்ணாச்சி கையை விரித்தாலும் ஆச்சரியமில்லை. இப்படிப்பட்ட மறதி மன்னர், தன் அலுவலகத்திற்கு கரெக்டாக வந்து சேர்வாரா அல்லது இன்னொரு அமைச்சரின் அறைக்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளை விரட்ட ஆரம்பிப்பாரா என்பதும் தெரியவில்லை.முன்பு, காங்., முன்னாள் அமைச்சரும், தற்போதைய லோக்சபா சபாநயகர் மீராகுமாரின் தந்தையுமான ஜெகஜீவன் ராம், 'ஞாபக மறதியின் காரணமாக, வருமான வரி கட்டவில்லை' என்று கூறினார்.அதுபோல, உள்துறை அமைச்சகத்தில் பணிகள் அதிகம் என்பதால், சிதம்பரம் அண்ணாச்சிக்கு மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஞாபக மறதி வந்து விட்டதோ? பிரதமர் மன்மோகன் சிங்கையே, 'என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்?' என்று இனி மிரட்டுவாரா சிதம்பரம். இந்த மறதி மன்னரைத்தான் காங்கிரசின், 'வலுவான தூண்' என, பாராட்டினார் பிரணாப் முகர்ஜி!அவர், பாராட்டியிருப்பது வெறும் கிண்டல் சமாச்சாரம் என்பது இப்போது புலனாகிறது. மத்திய அமைச்சர்களில், இன்னும் எத்தனை பேர் மறதி மன்னர்களாக இருக்கின்றனரோ.. கடவுளுக்கே வெளிச்சம்!
காவல் துறையைசாடுவதால்பயன் என்ன?
வி.சுந்தரவரதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தற்போது தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' என, கருணாநிதி கூறியுள்ளார். முன்பு, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 'போலீஸ்காரர்களின் 90 சதவீதம் ஈரல் கெட்டுவிட்டது' என்றார். 'காவல் துறை, முந்தைய ஆட்சியில் ஏவல்துறையாக மாறிவிட்டது. தி.மு.க., பொறுப்பேற்றவுடன், காவல் துறையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து விட்டோம். தற்போது, ஸ்காட்லாண்ட் போலீசாருக்கு இணையாக புத்துயிர் பெற்றுவிட்டது' என, கருணாநிதி பெருமைபடக் கூறினார்.அவ்வப்போது ஆட்சி மாறினாலும், போலீசாரின் கடமையுணர்வு மாறுவதில்லை. தற்போது, காவல் துறையில் பணிபுரியும் காவலர்களிலிருந்து, அதிகாரிகள் வரை, 90 சதவீதம் தி.மு.க., ஆட்சியில் பணியில் சேர்ந்தவர்களாகத் தான் உள்ளனர்.சட்டம் - ஒழுங்கு கெடுவதற்கு போலீசார் காரணம் என்றால், அந்த போலீசாரை தேர்ந்தெடுத்த கட்சியான தி.மு.க., தான் காரணம் என கூறலாமா? ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடன், காவல் துறையை குற்றம் சாட்டவில்லை. மாறாக, 'ராணுவத்தினரும், காவல்துறையினரும், தங்கள் உயிரை துச்சமாக மதித்து, மக்களுக்கு சேவை செய்கின்றனர்; நாட்டை காப்பாற்றும் காவல்துறைக்கு, சகலவித வசதிகளையும் அரசு செய்து தரும்' என்று கூறினார். அரசியல் கட்சிகள் தோல்வியைக் கண்டவுடன், காவல்துறையைச் சாடக் கூடாது; அது, நல்ல நடைமுறை அல்ல.
எங்கே போகிறது திரையுலகம்?
தேவவிரதன்,சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: சமீபத்தில் வெளியாகி பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, மக்களின் பெரும் ஆதரவோடு வெற்றி நடை போட்டும் ஒரு திரைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அதன் கதாநாயகன் ஒரு வில்லன்; நல்லவன் அல்ல. அது பெரிய விஷயமல்ல. முன்பும் வில்லனை கதாநாயகனாகக் கொண்ட திரைப்படங்கள் வந்ததுண்டு. ஆனாலும், இறுதியில் சத்தியம் ஜெயிப்பது போலவும், குற்றவாளிக் கதாநாயகன் தண்டிக்கப்படுவதாகவும் காட்டப்பட்டது. ஆனால், இப்படத்தில் அதுபோல இல்லை. திட்டம் போட்டு பணம் சுருட்டிய இரண்டு அரசாங்க அதிகாரிகள் தப்பித்து விடுவதாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.தவிர, இப்படத்தில் நிகழும் கொலைகளுக்கு அளவே இல்லை. யார், யாரை எதற்கு, ஏன் சுடுகிறார்கள் என்றே புரியாமல், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றன. மேலும், வசை மொழிகளும் ஏராளம். கெட்ட வார்த்தைகள் அங்கங்கே வந்து, தணிக்கையின் போது வெட்டப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.இப்படத்தை தயாரித்திருப்பது முன்னாள் முதல்வரின் குடும்பத்தினர்; வெளியிட்டிருப்பதும் அவர் குடும்பத்தினரே!இன்று, நாடு இருக்கும் சூழ்நிலையில், எவரும் திரைப்படங்கள் மூலம், அறிவுரை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் எதிர்மறை கருத்துக்களை உயர்த்திக் காட்டாமல் இருக்கலாம் அல்லவா?தமிழ் திரையுலகம் எந்த திசையில் போகிறது என்பது, புரியாத புதிராகவே உள்ளது!
பிரதமராகவும் ஆசைப்படுவார் விஜயகாந்த்
என்.சரவணன், பரமக்குடியிலிருந்து எழுதுகிறார்: தேர்தல் வந்தாலே அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். தற்போது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நம்நாட்டை வெளிநாடு போல் மாற்றுவதாக உறுதி கூறுகிறார்.சட்டசபையில், ஒவ்வொருவரின் பேச்சையும், முதல்வர் கவனிக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவராக உள்ள இவர், முதல்வர் பேசுவதை கூட கவனிக்காமல் இருப்பதை நாம், 'டிவி'யில் காண்கிறோம்.ஒவ்வொரு முறை தேர்தலிலும், முதல்வர் ஆசையோடு தான் போட்டியிடுகிறார். முதலில் இவர் மட்டும் சட்டசபைக்கு சென்றார். அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார். அடுத்து, 'உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்' என பிரசாரம் செய்கிறார்.அடுத்த சட்டசபை தேர்தலில், 'நான் முதல்வர் ஆனால் தான், மக்களுக்கு எல்லாம் செய்ய முடியும்' என்று சொல்வார். 'முதல்வர் ஆகிவிட்டால், மாநில நிதி பத்தாது, மத்தியில் இருந்தால் தான் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது செய்ய முடியும். இதற்கு, பிரதமர் ஆக வேண்டும்' என்று கூட சொன்னாலும் சொல்வார்.நல்லதை செய்யவும், சொல்லவும் அரசியல் தலைவராக இருந்தால் மட்டும் போதாது; தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது, எல்லா நேரங்களிலும் மக்களை சந்திக்க வேண்டும். ஏனென்றால், அரசியலில் முன்னோடியாக இருந்த பலர், பின்னாளில் காணாமல் போனதும் நம் நாட்டின் வரலாறு!
நம்பிக்கை துரோகம் செய்தது யார்?
மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., மீண்டும் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என, லட்சக்கணக்கானவர்கள் சொன்னதைக் கேட்டு, நம்பிக்கையோடு இருந்தேன். வரலாறு காணாத அளவுக்குத் தி.மு.க., படுதோல்வி அடைந்தது. நம்பிக்கையோடு இருந்த நான், மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நம்பிக் கெட்டவன் என்ற பரிதாப நிலையில் இருக்கிறேன்' என, மனம் நொந்து போயிருக்கிறார் கருணாநிதி.நம்பிக்கெட்டவர்கள் வரிசையில் கருணாநிதி மட்டுமா இருக்கிறார்; அண்ணாதுரையும் நம்பிக்கெட்டவர் தான்! தனக்குப் பிறகு தன் தம்பிமார் தி.மு.க.,வை மலரச்செய்வர் என, அந்தப் புண்ணிய புருஷர் நம்பினார். ஆனால், கடைசியில் என்ன நடந்தது? அண்ணாதுரையின் இதயக்கனியாக இருந்த, எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பதையும் மறந்து, தி.மு.க.,விலிருந்து அதிரடியாய்த் தூக்கியெறியக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.அண்ணாதுரையின் மகன் பரிமளம், கடன் தொல்லையால் அவதிப்பட்டபோது, அவருக்கு உதவி செய்யாமல் கடைசியில் பாவம் அவர் தற்கொலை செய்து கொண்டார்.இது, அண்ணாதுரைக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் இல்லையா?தி.மு.க.,வைத் தனது குடும்பச் சொத்தாக மாற்றிக்கொண்டது நம்பிக்கைத்துரோகம் இல்லையா, தனது மகன்கள், மகள், பேரன் மட்டுமே பதவிகள் வகிக்கவேண்டும் என நினைத்தது நம்பிக்கைத் துரோகம் இல்லையா?எத்தனையோ பேருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த இந்த மகானுபாவர், இன்று தனக்கு அநியாயமாக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர் என கதறித்துடிக்கிறார்!'வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்யவேண்டும்' என, இவர்தானே இப்போது உபதேசம் செய்கிறார்; அது, தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
கற்பழிப்பு இனிபொழுதுபோக்கு!
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில், சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, திருட்டுத்தனமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கச் சென்ற, தமிழக வனத்துறையினரும், காவல்துறையினரும், அந்த வேலையை விட்டுவிட்டு, அப்பாவி பெண்கள் 17 பேரை, துச்சாதனன் மாதிரி துகில் உரித்து, கதற கதறக் கற்பழித்திருக்கின்றனர்.இது சம்பந்தமாக நடந்த வழக்கு, 19 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு, இப்போது, தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் துவங்கி, சாதாரண பியூன் வரை, அனைவருமே குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தண்டனைகளையும் வழங்கியிருக்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், சிறைத் தண்டனையும், அபராதமும் சேர்த்து வழங்கப்பட்டிருக்கிறது.நீதிபதி இப்போது வழங்கிய தீர்ப்பு, இரண்டு தரப்பினருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை. நீதிபதி ஒரு தலைப்பட்சமாக நீதி வழங்கியிருக்கிறார் என துச்சாதனர்களான அதிகாரிகளும், ஊழியர்களும் மனம் குமுறியிருக்கின்றனர்.கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு, வழங்கப்பட்ட, பதினைந்தாயிரம் ரூபாய் போதாது என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள். கற்புக்கு இவ்வளவுதானா மதிப்பு என, குமுறியிருக்கின்றனர் அதைப் பறிகொடுத்த பெண்கள்.நம் நாட்டில் நீதி பரிபாலனம் இந்த கதியில் இருக்கிறது.சவுதி அரேபியாவில், கார் ஓட்டிய பெண்களுக்கு, கசை அடிகள் நிறைய கொடுத்திருக்கிறது அந்த நாட்டு கோர்ட்.முஸ்லிம் நாடுகளில் கற்பழிப்புக் குற்றம் நடைபெற்றால், இப்படி அபராதத் தொகையுடன் சிறைவாசம் அனுபவித்து தப்பிக்க முடியாது. அவர்கள் தரும் தண்டனை, உயிரே போகும் படி கடுமையானதாக இருக்கும்.கண்ணகி, சீதை, நளாயினி பிறந்த இந்த நாட்டில், கற்பழிப்புக்கு வெறும் பதினைந்தாயிரம் ரூபாய் போதுமா என்கின்றனர்; இனிமேல், கற்பழிக்க யாரும் பயப்படவே மாட்டார்கள்; தாராளமாக அபராதத் தொகை கட்டிவிட்டு, அழகாகத் தப்பித்து கொள்வர்.'தூக்குத் தண்டனையே வேண்டாம்' எனச் சொல்லும் இந்த நாட்டில், அடிக்கடி இதுமாதிரி கற்பழிப்புகள் நடப்பது பொழுது போக்காக ஆகிவிடும் பாருங்களேன்!
வசதிகளின்றி,வரி மட்டும்போடலாமா?
எச்.ஜெபராஜ், பாடி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில் எப்போது மழை பெய்தாலும், தண்ணீர் தேங்கி நிற்பதும், சாலைகள், தெருக்கள் குண்டும் குழியுமாகி விடுவதும், அன்றாட நிகழ்வுகளாகி, மக்களுக்கு பழக்கமாகி விட்டது.நகராட்சியிலும், அரசு அலுவலகங்களிலும் இஞ்ஜினியர்களும், சுக்குநீயர்களும் ஏராளமாக உள்ளனர்.அரசியல்வாதிகள் போலவே, சம்பாதிப்பதில், அரசு அதிகாரிகளும் முனைப்பு காட்டுகின்றனர். ஊடகங்களும், பத்திரிகைகளும் பலமுறை படத்துடன் செய்திகள் வெளியிட்ட பின்னரும், பல்வேறு மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னரும், அவை, சீர் செய்யப்படுவதில்லை. சாதனை செய்யாமல், சாதனைப் பட்டியல்களை அவ்வப்போது வெளியிடுவது அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. சமூகப் பொறுப்பு, மக்களுக்கு மட்டும்தானா, அரசுக்கு இல்லையா? வரிகளைப் பெற்றுக்கொண்டு, நன்மை செய்யாத அரசு இருந்தாலென்ன, போனாலென்ன?
அமைதிகுலையும்!
சிவ.சொ.சி.மகராஜன், தலைவர், வட்டார வளர் நலமன்றம், ஆத்தூர், தூத்துக்குடியிலிருந்து எழுதுகிறார்: ஊராட்சித் தலைவர் தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை, வார்டு வாரியாக எண்ணப்படும் எனத் தெரிகிறது. இதனால், வெற்றி பெற்ற தலைவர்கள், தமக்கு ஓட்டளிக்காத வார்டுகளை புறக்கணிப்பர்; பெரும்பான்மையினரும், வன்முறையாளர்களும், சிறுபான்மையினரையும், வலிமையற்றவர்களையும் தாக்கி, உயிர்ச்சேதம், பொருள் சேதம் உண்டாக்குவர்.சென்ற தேர்தல் முடிவில், பல இடங்களில் வகுப்புக் கலவரம், ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. கிராமங்களில், இதனால், ஒற்றுமை குறையும். ஆகையால் அனைத்து ஓட்டுச் சாவடிகளின் ஓட்டுகளையும், மொத்தமாக போட்டு கலக்கி, அதன்பின் எண்ணினால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது. தேர்தல் கமிஷன், உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்!


