"டாப்' பொறியியல் கல்லூரிகளில் "சீட்'டுகள் நிரம்பின : அடுத்தகட்ட கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
"டாப்' பொறியியல் கல்லூரிகளில் "சீட்'டுகள் நிரம்பின : அடுத்தகட்ட கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
"டாப்' பொறியியல் கல்லூரிகளில் "சீட்'டுகள் நிரம்பின : அடுத்தகட்ட கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
முதல் 25 இடங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள கவுன்சிலிங் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டதால், அடுத்தகட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதலிடத்தில் உள்ள ஆர்.எம்.டி., பொறியியல் கல்லூரி, அதே நிர்வாகத்தைச் சேர்ந்த, இரண்டாம் இடத்தில் உள்ள ஆர்.எம்.கே., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வேலம்மாள் பொறியியல் கல்லூரி உட்பட, 'டாப்' தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 90 சதவீதம் அளவிற்கு நிரம்பிவிட்டன. இந்த கல்லூரிகளில், எஸ்.சி., அருந்ததியர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., ஆகிய பிரிவினருக்கான இடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. ஓ.சி., - பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவில் ஒரு இடம் கூட இல்லை.
நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில், எஸ்.சி.ஏ., பிரிவில் எட்டு இடங்கள், எஸ்.சி., பிரிவில் 34 இடங்கள் மற்றும் எஸ்.டி., பிரிவில் நான்கு இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், இதர பிரிவுகளில் காலியிடங்கள் இல்லை. ஆர்.எம்.டி., பொறியியல் கல்லூரியில், எஸ்.சி.ஏ., பிரிவில் ஒன்பது இடங்கள், எஸ்.சி., பிரிவில் 38 இடங்கள், எஸ்.டி., பிரிவில் மூன்று இடங்கள் காலியாக இருந்தன. மற்ற பிரிவுகளில் காலியிடங்கள் இல்லை. சாய்ராம் பொறியியல் கல்லூரியில், எஸ்.சி.ஏ., பிரிவில் 18 இடங்கள், எஸ்.சி., பிரிவில் 70 இடங்கள், எஸ்.டி., பிரிவில் ஐந்து இடங்கள் காலியாக இருந்தன.
'டாப்' பட்டியலில் உள்ள பிரபலமான கல்லூரிகளில், எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., ஆகிய மூன்று பிரிவுகளில் தான் காலியிடங்கள் உள்ளன. ஆனால், இந்த பிரிவுகளில் சேர மாணவர்கள் முன்வராததால், இந்த இடங்கள் காலியாகவே இருக்கின்றன. பி.சி., - எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தான், பொறியியல் படிப்புகளில் சேர தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு, முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ரேங்க் பட்டியலில் இரண்டாம் கட்டத்தில், 25வது இடத்திலிருந்து 40வது, 'ரேங்க்' வரை இடம்பெற்றுள்ள கல்லூரிகளில் சேர தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை மற்றும் சென்னை புறநகர்ப்பகுதிகளில் அமைந்துள்ள கல்லூரிகளே, தமிழகம் முழுவதும் இருந்து வரும் மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. ஜெயா பொறியியல் கல்லூரி, தனலட்சுமி பொறியியல் கல்லூரி, வேல்ஸ் சீனிவாசா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கல்லூரிகளில், மாணவர்கள் எதிர்பார்க்கும் பாடப்பிரிவுகள் தாராளமாக கிடைப்பதால், இரண்டாம் கட்டத்தில் உள்ள கல்லூரிகளை, மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.
வேல்ஸ் சீனிவாசா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், ஓ.சி., - 78 இடங்கள், பி.சி.எம்., - 14, பி.சி., - 92, எம்.பி.சி., - 71, எஸ்.சி.ஏ., - 11, எஸ்.சி., - 51, எஸ்.டி., - 2 ஆகிய இடங்கள் காலியாக இருந்தன. இதில், நேற்று மாலை வரை ஓரளவு இடங்கள் நிரம்பிவிட்டன. எனவே, இறுதிக்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகளை மாணவர்கள் முதலில் தேர்வு செய்யக் காரணம், தரமான கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சிறப்பாக தங்குமிட வசதிகள், கல்லூரிகளில் உள்ள வசதிகள் போன்றவை தான். மேலும் பல சில ஆண்டுகளுக்கு முன், ரேங்க் பட்டியலில் மிகவும் பின்தங்கியிருந்த கல்லூரிகள், இப்போது ரேங்க் பட்டியலில் வேகமாக முன்னுக்கு வந்துள்ளன. மாணவர்கள் அதையும் கருத்தில் கொண்டு, தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-