PUBLISHED ON : ஆக 27, 2011 12:00 AM

அண்ணாதுரைக்கு தெரியாதா?
சு.தா.சீனிவாசன், செம்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழ்ப் புத்தாண்டை, தை 1ம் தேதி என தாம் அறிவித்ததற்கு, மறைமலை அடிகளும், வேறு, 500 புலவர்களும் முன் வைத்த கோரிக்கையே காரணம்' என, கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., 1967ல், ஆட்சி அமைத்தது. அண்ணாதுரை, வேறு எவரும் இதைக் கொண்டு வரவில்லை. இவரே, நான்கு முறை முதல்வரானார். அசல் தமிழ் வெறியனாக நடந்து கொண்ட தமிழ்க்குடிமகன் என்ற சாத்தையா, அறநிலையத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கூட, தை 1ம் தேதி தான், தமிழ் வருடப் பிறப்பு எனக் கூறவில்லை. ஏன், வேதாசலம் என்ற மறைமலை அடிகள் கூட, அவ்வாறு ஒரு கோரிக்கையை வைத்தாரா என்பதே, இப்போது சந்தேகமாக உள்ளது. மறைமலை என்பதே, தமிழ் மூலப்பெயர் அல்ல. வேதாசலம் என்ற சமஸ்கிருத பெயர் தான், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது என்பதை, எவரும் மறுக்க முடியாது. கருணாநிதி கூறுவது, அப்பட்டமான பொய். தாம் பேசியதை, அப்படி பேசவில்லை என கூசாமல் மறுப்பது அவருக்கு வாடிக்கை. அண்ணாதுரை தம் கனவில் வந்ததாக கூறியவர் தானே? செம்மொழி மாநாட்டுக்கு பின், ஓய்வு பெறப் போவதாக கூறிவிட்டு, 'அப்படிக் கூறவில்லை' என்றவர் தானே இவர். மக்கள், இவரை புரிந்து கொண்டதால், 'வரலாறு' காணாத தோல்வியை சந்தித்திருக்கிறார்.
தங்கம் கானல் நீர்
என்.ராகவன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: தங்கத்தை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள், தங்கம் என்ற சொல்லைக் கேட்டே திருப்தி அடைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு விட்டது. தங்கத்தின் விலை இப்படியே நீடித்தால், தங்கம் என்ற பெயர் கொண்ட பெண்களுக்கு, வரதட்சணை வாங்காத மாமியார்கள் முன்வர வாய்ப்பு
அதிகம்; பெயரைச் சொல்லியாவது தங்களது தங்க ஆசையை தீர்த்துக் கொள்ளலாமே! எதிர்வரும் தேர்தல்களில், கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில், ஓட்டுகளை அள்ளிக் குவிக்க, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அட்சய திருதியை அன்று, ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும், 2 கிராம் சொக்கத் தங்கம் இலவசமாக வழங்கப்படும்' என்று சேர்க்கலாம். பணம் படைத்தவர்களுக்கு தங்கம் அவர்களது அங்கம். ஏழை, எளியவர்களுக்கு, கானல் நீர்.
கிரிக்கெட் பக்கம் கவனம் திரும்புமா?
சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: இன்று, பத்திரிகைகளில், மீடியாக்களில் பிரேக்கிங் நியூஸ், ப்ளாஷ் நியூஸ் மற்றும் ஸ்கோர்லிங் நியூஸ்களாக வருவது, அன்னா ஹசாரே தான். ஹசாரேவுக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவுகள் பெருகினாலும், இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பிரமுகர், வெளிநாட்டில் சிகிச்சையில் இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் வீட்டிலேயே களவு; கூட்டணி கட்சிகளை நிர்வகிக்கும் நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு தினசரி சிக்கல் என, காங்., கட்சியின் முக்கியஸ்தர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். லஞ்சம், ஊழல் இரண்டும் நோய் போன்று பரவியிருப்பதை எதிர்த்து, ஒரு தனி நபர் போராடும்போது, ஆதரவு, எதிர்ப்பு வரத்தான் செய்யும். லோக்பால் தவிர, வேறு எதற்காகவும் போராடத் தயார் என ஹசாரே கூறியுள்ளார்; இதில் கொஞ்சம், இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில், அரசியல் தலையீடு வேண்டாம் என்பதையும் சேர்த்துக் கொண்டால், எதிர்கால இளைஞர்கள் காப்பாற்றப்படுவர்.
கனிமொழி வாதம் சரியா?
எஸ்.அருண்குமார், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'ஸ்பெக்ட்ரம் ஊழல் - பிரதமர், சிதம்பரம் மீது கை காட்டுகிறார் கனிமொழி' என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு, என்னுடைய விளக்கம் இதோ: 'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டால் பெருமளவு லாபம் அடைந்ததாக, ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், தி.மு.க., எம்.பி., கனிமொழி சார்பில், மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார் ஆஜராகி வாதாடி வருகிறார். அவருடைய வாதப்படி, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் பங்குகளை மட்டும் தான், வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யுனிநார் விற்பனை செய்யப்பட்டுள்ளதே தவிர, 'ஸ்பெக்ட்ரம்' உரிமங்களை விற்பனை செய்யவில்லை என்பதாகும். 'ஒரு வீட்டை விற்றேன், காம்பவுண்ட் சுவரை விற்கவில்லை' என்பது போல் உள்ளது இது. கம்பெனிகள் சட்டம் 1956ல் உள்ளதை, அவருக்கு யாராவது தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், இந்த விற்பனையால் ஏற்பட்டுள்ள மறைமுக லாபத்தைப் பற்றியோ அல்லது உரிமங்களை நிர்ணயம் சய்வதால் ஏற்படும் ஆதாயம் பற்றியோ, அவரால் விவாதம் வைக்கப்படவில்லை.இதற்கு, சி.பி.ஐ., தரப்பில் பதில் விவாதம் வரும் என, நாம் எதிர்பார்க்கலாம்.
ஊழல் எதிர்ப்பு: காங்கிரசும் போராடட்டும்!
மு.கோவிந்தசாமி, திருமுல்லைவாயல், சென்னையிலிருந்து எழுதுகிறார்: காந்திஜியின் அடிப்படைக் கொள்கைகளை, காங்கிரசார் கை நழுவ விட்டதால், இன்று, நாட்டில், பல கேடுகள் நிகழ்ந்து வருகின்றன. சுயநலம், பதவி மோகம், பொருள் குவிப்பதில் இறங்கி விட்டதால், மற்ற கட்சிகளும், அவர்களை விட, பன்மடங்கு பொருள் ஈட்டுவதில் இறங்கிவிட்டன. முடிவில், மக்கள் நலிவடைந்து வருகின்றனர். ஏழ்மை, வறுமை, ஏற்றத்தாழ்வு, ஏய்ப்பு, கலாசார சீரழிவு தாண்டவமாடுகிறது. ஜாதி கலவரங்கள், தீண்டாமை, பயங்கரவாதம் தலைதூக்கி ஆடுகிறது; வன்முறை பெருகி வருகிறது. எங்கும் சுரண்டல், லஞ்சம், புற்றுநோய் போல், ஊழல் பரவுகிறது. நாத்திகர்கள், கோவில் சொத்துக்களை அபகரிக்கின்றனர். ஆன்றோர் சொன்ன அறிவுரைகள் எங்கே? நீதிதேவன் எங்கே போனான்? அரசு எப்படி செயல்படுகிறது? காந்திய வழியில் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவுக்கு, மக்கள் முழு ஆதரவு தரவேண்டும். காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்றார் காந்திஜி. காங்கிரசார் அன்று மதிக்கவில்லை; இப்போது வாய்ப்பு வந்திருக்கிறது. காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து, நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, அன்னா ஹசாரேவின் முயற்சியை வெற்றியடையச் செய்யட்டும்.


