Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., ஆட்சி மின்சார கொள்முதலில் ரூ.7,200 கோடி நஷ்டம்

தி.மு.க., ஆட்சி மின்சார கொள்முதலில் ரூ.7,200 கோடி நஷ்டம்

தி.மு.க., ஆட்சி மின்சார கொள்முதலில் ரூ.7,200 கோடி நஷ்டம்

தி.மு.க., ஆட்சி மின்சார கொள்முதலில் ரூ.7,200 கோடி நஷ்டம்

ADDED : ஆக 18, 2011 09:37 PM


Google News
Latest Tamil News

சென்னை : தி.மு.க., ஆட்சியில் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில், 7,200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அமைச்சர் விஸ்வநாதன் குற்றம்சாட்டினார்.

சட்டசபையில், மின்துறை மானிய கோரிக்கையில், அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது: கடந்த ஆட்சியில், பெயரில் மட்டும் நிதி வைத்திருந்தவர்கள், மின்வாரியத்தில் நிதியை வைக்காமல் சென்றனர்.

அ.தி.மு.க., ஆட்சி நிறைவுற்ற 2006ல், மின்வாரிய கடன் 4,911.52 கோடி ரூபாயாக இருந்தது. பின், தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில், கடன் தொகை 40 ஆயிரம் கோடி ரூபாயாகவும், உபகரணங்கள், நிலக்கரி வாங்கியதில் நிலுவைத்தொகையாக 5,000 கோடி ரூபாயாகவும், கடனாக்கி சென்றுள்ளனர். தற்போது, வருவாயை பெருக்கவும், கடனை குறைக்கவும் சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தி.மு.க., ஆட்சியில், ஒரு ஆண்டு மட்டும்தான், 5.50 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கினர். மற்ற நான்காண்டுகளில், ஆறு ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்தனர். இந்த அதிகவிலை கொள்முதலால், மின்வாரியத்திற்கு 7,200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை தவிர்க்க முடியாது என்றாலும், ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் பெரும் கடன்சுமை ஆகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், மூன்று மாதங்களில் மின்கொள்முதலில், 225 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெரும் கடனில் தவிக்கும் மின்வாரியத்தை பல வகைகளில் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கு மேலும், கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது; அப்படிப்பட்ட நிலைக்கு தி.மு.க., தள்ளிவிட்டது. இவ்வாறு விஸ்வநாதன் பேசினார்.

பின், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, 'இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி வாங்கியதிலும், கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ததிலும் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படுமா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு, 'நிலக்கரி கொள்முதலில், ஊழல் நடந்திருப்பது உண்மைதான், ஆனால், மத்திய அரசு தான் நிலக்கரி தருகிறது. அதில், நாம் விசாரணை கமிஷன் அமைக்க முடியாது' என்றார்.

'இல்லை... இல்லை...!' : மின்துறை அமைச்சர் விஸ்வநாதன், பதிலளிக்கும்போது, அடிக்கடி தி.மு.க., ஆட்சியை குறைகூறி பேசினார். 'புதிய ஆட்சி வந்தவுடன், மின்துறையில் ஆய்வு நடத்தினோம். அப்போது, எதையெடுத்தாலும் இல்லை என்ற நிலையை தி.மு.க., உருவாக்கியிருந்தது. மின்மாற்றிகள் இல்லை, மீட்டர்கள் இல்லை, மின்னூட்டிகள் இல்லை, மின்தேக்கிகள் இல்லை, மின் கடத்திகள், கம்பங்கள், மின் உற்பத்தி, நிதி, என எதுவுமே இல்லை. ஆனால், அவர்கள் விட்டுப்போனதோ கடன் தொல்லை. எனவே, தான் மக்களும் அவர்களுக்கு, ஆட்சியும் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டனர். இனி இல்லாமை இல்லை என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம்' என, கடகடவென பேசினார். இதை கேட்டு, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் குலுங்கி, குலுங்கி சிரித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us