Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் மோசடி புகார்

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் மோசடி புகார்

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் மோசடி புகார்

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் மோசடி புகார்

ADDED : ஜூலை 26, 2011 01:35 AM


Google News

சென்னை : சகோதரியின் சொத்தை மீட்கச் சென்றவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து, நிலத்தை அபகரிக்க முயன்றதால், மாஜி அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் சவுந்தர்ராஜன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, அண்ணாநகர், பெல்லி ஏரியா, பாரத் பிளாட்டைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்,45; மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு விவரம்: என் சகோதரி கலைச்செல்வி, சென்னையில் நர்சிங் படித்து வந்த போது, சேத்துப்பட்டைச் சேர்ந்த தனச்சக்கரவர்த்தியின் தம்பி மனோகரனும், அதே கல்லூரியில் படித்து வந்தார். கலைச்செல்வி, மனோகரனின் பெரியம்மா மகள். இதனால், மனோகரன் தன் மருத்துவ உதவியாளராக கலைச்செல்வியை நியமித்தார். மனோகரனுக்கு அரசு டாக்டர் பணி கிடைத்தது. பல இடங்களில் பணியாற்றிய அவர், இறுதியாக குஜிலியம்பாறையில் பணியாற்றினார். அத்துடன், மருத்துவம் சார்ந்த பல படிப்புகளையும் ஆரம்பித்து நடத்தி வந்தார். அதற்கு முழு பொறுப்பாக கலைச்செல்வியை நியமித்தார். இதற்கு, மனோகரன் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



மனோகரன்,'நான், கஷ்டப்படும் காலத்தில் குடும்பத்தின் மூலமாக பொருளாதார உதவி செய்தவர் கலைச்செல்வி. அவருக்கு உதவி செய்வதை நான் நிறுத்த முடியாது' என்று கறாராகக் கூறிவிட்டார். குஜிலியம்பாறையில், 'கலைச்செல்வி திருமண மண்டபம்' கட்டி, அதனருகில் இருவரும் வசித்து வந்தனர். கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் மனோகரன் திண்டுக்கல்லில் இருந்து டூவீலரில் வந்த போது விபத்தில் சிக்கினார். அதற்கான மருத்துவச் செலவுகள் அனைத்தையும் கலைச்செல்வியே செய்தார். அப்போது மனோகரனின் அண்ணன் தனச்சக்கரவர்த்தி, பாதிச் சொத்தைக் கேட்டு மிரட்டினார். மனோகரன் தனது சொத்துக்களை, தங்கை கலைச்செல்வி பெயரில், உயில் எழுதி வைத்தார்.



இந்நிலையில், 2004ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மாரடைப்பால் மனோகரன் இறந்தார். அதன் பின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது உதவியாளர்கள் ராஜா, தங்கவேல் ஆகியோர் உதவியுடன், கலைச்செல்வியை விரட்ட முயற்சித்தனர். போலீஸ் தலையிட்டு, பிரச்னையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.



இந்தச் சூழலில், கலைச்செல்விக்கு உதவி செய்வது போல், தனச்சக்கரவர்த்தியின் உறவினர்கள் நாடகமாடினர். தொடர்ந்து 2007 அக்டோபர் மாதம், காஸ் அடுப்பை திறந்து வைத்து, தீப்பிடிக்க வைத்து, கலைச்செல்வி இயற்கையாக இறந்தது போல் நாடகமாடினர். இதில், கலைச்செல்வி இறந்துவிட்டார். அவர், தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த தகவல் கூட எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து, தனச்சக்கரவர்த்தி மற்றும் உறவினர்களான முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரிடம் நான் கேட்ட போது, ''அவரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பியாச்சு,'' என்றனர். அதன் பின், முன்னாள் அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோர் கூட்டுச் சதி செய்து, கலைச்செல்வியின் வீட்டை உடைத்து நகை, பணம் பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.



போலீசில் புகார் அளித்த போதும், அமைச்சர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சொத்துக்களை அபகரிக்க, போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். அங்கிருந்து தப்பி வந்து, நான் உங்களிடம் புகார் அளித்துள்ளேன். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது உதவியாளர், தனச்சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us