ADDED : ஜூலை 24, 2011 10:08 AM
லண்டன் : லண்டனின் லாட்ஸ் நகரில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட்டின் 3வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை இந்தியா துவக்கியது. இதில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சதம் அடித்து தனது 100வது சதத்தை பூர்த்தி செய்து, ஒரு புதிய சாதனையை நிகழ்த்துவார் என உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் காய்ச்சல் காரணமாக சச்சின், மிடில் ஆர்டரிலேயே களமிறங்கினார். உணவு இடைவேளை வரை அவரது உடல்நிலை சீராக இருந்ததால், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் களமிறங்கினார். சதம் அடிப்பார் என்ற அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றமாக்கிய சச்சின், 58 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவுட்டான சச்சின் மைதானத்தில் இல்லாமல் உடனே தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று விட்டார். டாக்டர்களின் அறிவுரையின்படி மருந்துகள் எடுத்துக் கொண்ட சச்சின், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தார். உடல்நிலை குணமானதும் இங்கிலாந்திற்கு எதிரான 2வது இன்னிங்சில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.