ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல்
ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல்
ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல்
UPDATED : ஜூலை 25, 2011 01:59 PM
ADDED : ஜூலை 23, 2011 11:42 PM

வாஷிங்டன்:'இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், விரிவாக விவாதித்தனர்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறினார்.கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, சென்னை வந்தபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் ஆலோசித்தனர். இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து, நாம் என்ன கவலைப்படுகிறோமோ, அதே மாதிரியான கவலையைத் தான், இருவரும் பகிர்ந்து கொண்டனர்.சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்பட, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இரு மடங்காக தீவிரப்படுத்தி, தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.இறுதிக் கட்டப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி, 'சேனல் 4' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம், அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இலங்கை மீது திரும்பியுள்ளது.
இதன் வெளிப்பாடே, ஹிலாரி மற்றும் ஜெயலலிதா இடையேயான சந்திப்பு.'சேனல் 4' வீடியோ குறித்து, இலங்கை அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க வேண்டும். இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் ராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான விஷயங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் மக்களையும் உடனே விடுவிப்பதுடன், அவர்களை மறுகுடியமர்த்துவதில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதில், அமெரிக்கா இயன்ற அளவு உதவி செய்து வருகிறது.இலங்கையில் அவசர கால சட்டம், நீண்ட நாட்களாக அமலில் உள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மனித உரிமைகள் விவகாரத்தில், முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஊடகச் சுதந்திரம் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மனித உரிமை மீறல் பிரச்னைகளுக்கு துணை ராணுவப் படையினர் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, படை குறைப்பு நடவடிக்கைகளும் அவசியம். தமிழகத்தில் உள்ள தமிழர்களின் விருப்பமும் இதுதான். முதல்வர் ஜெயலலிதாவும், இந்த விஷயத்தை தான் வெளிப்படுத்தினார்.இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.