UPDATED : ஆக 20, 2011 04:15 PM
ADDED : ஆக 20, 2011 08:56 AM

சென்னை: தத்தெடுத்த கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, இரண்டு லட்ச ரூபாய் செலவில் சீருடைகளை, பத்ம ஷேசாத்ரி பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காட்டை அடுத்த சுந்தரசோழபுரத்தில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி. அடுத்தடுத்துள்ள இந்த பள்ளிகளில், மொத்தம் 762 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை செயல்படுகின்றன.
சென்னை, தி.நகர் மற்றும் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பத்ம ஷேசாத்ரி பால பவன் பள்ளி நிர்வாகத்தினர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த பள்ளியை, அங்குள்ள ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் தத்தெடுத்தனர். நகரங்களில் கல்வி சேவை என்பது சிறப்பான விஷயம் என்கிற போதிலும், கல்விக்காக ஏங்கித் தவிக்கும் கிராமப்புற பள்ளியை அடையாளம் கண்டு, அந்த பள்ளிக்கு கல்வி சேவை புரிய அனைவரும் முன்வர வேண்டும் என்ற, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவுரையே, பத்ம ஷேசாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குனர் ஒய்.ஜி. பார்த்தசாரதியை சிந்திக்க வைத்துள்ளது.
அதன் அடிப்படையிலேயே, இந்த பள்ளியை தத்தெடுத்து, அந்த பள்ளிக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும், கல்வி தொடர்பான வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். புதிய வகுப்பறைகள், கழிவறை வசதி, சமையல் செய்ய வசதி, மேற்கூரை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை செய்து தந்துள்ளனர். இதே போல, 'ஸ்மார்ட் கிளாஸ்' என அழைக்கப்படும் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் நான்கு மானிட்டர்களுடன் கூடிய தொழில்நுட்ப வகுப்பு வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர். இவை தவிர்த்து, ஆண்டுதோறும் இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடை, காலணிகள், புத்தகங்கள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் அப்பள்ளியில் பயிலும் 762 மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கினர். இந்த பணியில் பத்ம ஷேசாத்ரி பள்ளியின் முதல்வர் வள்ளி அருணாச்சலம், துணை முதல்வர் சந்திரா நாகராஜன், ஆசிரியைகள் ராதா பாலசுப்ரமணியம், ஜெய் கிருஷ்ணா மற்றும் கருணை கழகத்தைச் சேர்ந்த ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பத்ம ஷேசாத்ரி பள்ளி மாணவ, மாணவியர், இப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினர்.


