எண்ணூரில் நிலக்கரி கையாள தமிழக மின் வாரியத்துக்கு அனுமதி
எண்ணூரில் நிலக்கரி கையாள தமிழக மின் வாரியத்துக்கு அனுமதி
எண்ணூரில் நிலக்கரி கையாள தமிழக மின் வாரியத்துக்கு அனுமதி
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் வசதிகளை விரிவுபடுத்த, தமிழக மின் வாரியம் மற்றும் அதன் கூட்டு நிறுவனத்துக்கு, சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.
தமிழக மின் வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து, மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலக்கரியைக் கொண்டு, மின் உற்பத்திக்கான ஆலையை எண்ணூரில் அமைக்க, தேசிய அனல் மின் கழகம் பரிசீலிக்க வேண்டும். இதற்காக, எண்ணூர் துறைமுகத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இந்த கூட்டு நிறுவனமானது (என்.டி.இ.சி.எல்.,), எண்ணூர் துறைமுகத்தில் தமிழக மின் வாரியத்துக்கான டெர்மினலை பயன்படுத்தி வந்தது. மின் உற்பத்தி திட்டத்துக்கான நிலக்கரியை, எண்ணூர் துறைமுகத்தில் உள்ள, ஒன்று மற்றும் இரண்டாம், 'பெர்த்' மூலம் கையாள வேண்டும். எனவே, துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் பணிக்காக, கூட்டு நிறுவனம் ஏலம் கோரியது. இதையடுத்து, செட்டிநாடு இன்டர்நேஷனல் கோல் டெர்மினல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'எண்ணூர் துறைமுகத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எங்கள் நிறுவனம் மட்டுமே இந்த டெர்மினலை பயன்படுத்த முடியும். துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் வசதிகளை, கூட்டு நிறுவனமான என்.டி.இ.சி.எல்.,க்கு அனுமதிக்க, எண்ணூர் துறைமுகத்துக்கு தடை விதிக்க வேண்டும். துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் வசதிகளை மேற்கொள்ள, என்.டி.இ.சி.எல்.,க்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.
தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த மனுவில், 'எண்ணூர் துறைமுகத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது, 'பெர்த்', தமிழக மின் வாரியத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே என ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் வேறு யாரும் குறுக்கிட உரிமையில்லை' என கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த ஐகோர்ட், 'ஒப்பந்தம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்னை எழுந்தால், அதை நிபுணர் குழு தான் தீர்க்க வேண்டும். எனவே, நிபுணர் குழுவை சம்பந்தப்பட்டவர்கள் அணுக வேண்டும். அதில் தீர்வு ஏற்படவில்லை என்றால், மத்தியஸ்த மற்றும் சமரச சட்டத்தின்படி தீர்வு காணப்பட வேண்டும். நிபுணர் குழு முடிவெடுக்கும் வரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என உத்தரவிட்டது. தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டதை எதிர்த்து, ஐகோர்ட்டில் தமிழக மின் வாரியம், எண்ணூர் துறைமுகம், என்.டி.இ.சி.எல்., நிறுவனம், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தது. மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து, செட்டிநாடு நிறுவனமும் அப்பீல் மனுவை தாக்கல் செய்தது.
அப்பீல் மனுக்களை நீதிபதிகள் ஆர்.பானுமதி, பி.ராஜேந்திரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. தமிழக மின் வாரியம் சார்பில் அட்வகேட் - ஜெனரல் நவநீத கிருஷ்ணன், வழக்கறிஞர் வாசுதேவன், எண்ணூர் துறைமுகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் எம்.ரவீந்திரன் ஆஜராகினர். 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தனக்குரிய,'பெர்த்'தை தமிழக மின் வாரியம் பயன்படுத்தும் உரிமையில், செட்டிநாடு நிறுவனம் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. வழக்கில், ஆரம்ப முகாந்திரத்தை செட்டிநாடு நிறுவனம் காட்டவில்லை. மின் உற்பத்தியை பெருக்குவதற்காக, மூன்று அனல் மின் திட்டங்களை தமிழக மின் வாரியம் ஏற்படுத்தியுள்ளது. கூட்டு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளது. வழக்கில் பொது நலன் அடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு பார்த்தால், மின் வாரியத்துக்கு தான் சாதகம் உள்ளது. இடைக்கால தடை பெற செட்டிநாடு நிறுவனத்துக்கு உரிமையில்லை. இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பித்தால், மின் வாரியம் மற்றும் மின் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும். அதனால், மாநிலத்தில் மின்சார பிரச்னை ஏற்படும். தற்போதைய நிலை தொடர வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீக்கப்படுகிறது. தமிழக மின் வாரியத்துக்கான ஒன்று மற்றும் இரண்டாம் 'பெர்த்'தில், நிலக்கரி கையாளும் வசதிகளை விரிவுபடுத்த, தமிழக மின் வாரியம், என்.டி.இ.சி.எல்., நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். செட்டிநாடு நிறுவனத்தின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மத்தியஸ்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இருதரப்பிலும் தங்கள் நிவாரணங்களை சட்டப்படி அணுகலாம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.