துவங்கியது பதுக்கல்: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள் விடுமுறை எதிரொலி
துவங்கியது பதுக்கல்: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள் விடுமுறை எதிரொலி
துவங்கியது பதுக்கல்: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள் விடுமுறை எதிரொலி

சேலம்: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும், 'டாஸ்மாக்' கடைகள், 6 நாள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சரக்கு பதுக்கல் துவங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர், 17, 19ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்காக, 'டாஸ்மாக்' நிறுவனத்தின் சார்பில் கடைகளுக்கான சுற்றறிக்கை தயார் ஆகி வருகிறது. இந்த அறிக்கையின் படி அக்டோபர், 15 மாலை, 5 மணி முதல் அக்டோபர், 21 மாலை, 5 மணி வரை அனைத்து, 'டாஸ்மாக்' கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 'டாஸ்மாக்' மூலம் மது விற்பனை துவக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது தான் முதல் முறையாக அதிக நாள், 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது, 'குடி'மகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'டாஸ்மாக்' அதிகாரிகள் கடைகளை ஆறு நாள் மூட முடிவு செய்து இருக்கும் செய்தி இன்று பரவிய நிலையில், பதுக்கல் பணியும் துவங்கி விட்டது. இதில் அங்கீகரிக்கப்படாத பார்கள், கடைகளின் அருகில் உள்ள பார்கள், தாபா ஹோட்டல்களிலும் பதுக்கல் பணிகள் துவங்கி உள்ளது.
இது குறித்து, 'டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக, 'டாஸ்மாக்' கடைகள் முதல் முறையாக அதிக நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தற்போது ஆறு நாட்கள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அக்டோபர், 19 மாலையில் ஓட்டுப் பதிவுக்கு பின், அக்டோபர், 20 முழுவதும் கடைகளை திறக்க அரசிடமும், போலீஸிடமும் அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கடைகள் திறக்கப்படும். மேலும், கடைகளை அடைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி விற்பனையாளர்கள் சுழற்சி முறையில் கடைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணியில் இருப்போர் திருட்டு விற்பனையில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை போல் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் இல்லாததால், சில நாட்களாக சரக்கு விற்பனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.


