ADDED : ஜூலை 25, 2011 10:06 PM
காரைக்குடி : மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில், சி.எஸ்.ஐ.ஆர்- 'சிக்ரி' நிறுவன நாள் விழா நடந்தது.
மூத்த விஞ்ஞானி பழனிச்சாமி வரவேற்றார். 'சிக்ரி' இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை தலைமை வகித்தார். திருச்சி, தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் என்.சுந்தரராஜன் பேசுகையில், '' அரிமான தடுப்பு ஆராய்ச்சி என்பது இயற்பியல், வேதியல், கட்டுமான பொறியியல், இயந்திரவியல், கணிதவியல், உயிர் தொழில்நுட்ப வியல் போன்ற வல்லுனர்களின் கூட்டு முயற்சியாகும். உலோக அரிமானத்தை தடுக்கும் பொருட்டு அரிமான தடுப்பு பூச்சுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்வி ஏவுகணைக்கான பாகங்களின் அரிமான தன்மை குறித்த ஆராய்ச்சியில் 'சிக்ரி' யின் பங்கு மகத்தானது. கடந்த காலத்தில் துத்தநாகம், மின்முலாம் பூச்சுக்கள் சிறந்த அரிமான பாதுகாப்பு வழிமுறைகளாக இருந்தது. எதிர்காலத்தில், 'மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்' துறைக்கான அரிமான பாதுகாப்பு நெறி முறை உருவாக்கப்படுவது மிக முக்கியமான ஆராய்ச்சியாகும். இந்தியாவின் அரிமான வரைபடம் போன்று, உலக அளவிலான அரிமான வரைபடம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்'' என்றார்.முன்னாள் இயக்குனர் யக்ஞராமன் பங்கேற்றார். விஞ்ஞானி மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.