ராஜாவால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் இழப்பு
ராஜாவால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் இழப்பு
ராஜாவால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் இழப்பு
UPDATED : ஜூலை 25, 2011 03:18 AM
ADDED : ஜூலை 23, 2011 11:46 PM

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோரின் வாதம், நாளை முதல் துவங்குகிறது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்தது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், கடந்த 21ம் தேதி துவங்கியது. சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர் லலித், தனது வாதத்தை முடித்து வைத்து பேசியதாவது:வருவாய் பணிகள் துறை அதிகாரி அளித்த குறிப்பின் அடிப்படையில், இந்த முறைகேட்டால், அரசு கருவூலத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோரின் விதிமுறை மீறலால், அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த இழப்பீடு, 30 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்பட்டாலும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் டெலிகாம் ஆகிய விவகாரங்களில் மட்டும் 7,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தவிர, பொய்யான ஆதாரங்களை உருவாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு லலித் கூறினார்.இதையடுத்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனி கூறுகையில், 'குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான சி.பி.ஐ., தரப்பு வாதம் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதம், வரும் 25ம் தேதி (நாளை) துவங்கும்' என்றார்.