ADDED : ஆக 11, 2011 01:07 AM
இளையான்குடி : தாயமங்கலம் பகுதியில் தொடரும் திருட்டுக்களால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இளையான்குடியிலிருந்து 10 கி.மீ .தூரத்தில் தாயமங்கலம் உள்ளது. தாயமங்கலத்தை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலும் உள்ளது. தினமும் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக இப்பகுதியில் திருட்டுக்கள் தொடர்ந்து நடக்கிறது. கடந்த மாதம் பொட்டகவயல் கிராமத்தில் இரவில் வீட்டின் உரிமையாளரை தாக்கி விட்டு வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை கும்பல் ஒன்று திருடிச் செல்லும் போது கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் விரட்டிச் சென்று மூன்று நபர்களை பிடித்தனர். மேலும் கோயிலில் முடி இறக்கும் மண்டபத்தில் சேகரித்து வைத்து இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள முடிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசில் புகார் கொடுத்தும் இது வரை திருடன் பிடிபடவில்லை. சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி திருட்டுக்கள் நடப்பது தொடர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


