வழுதூர் இரண்டாவது யூனிட் "கட்': மின் வினியோகம் பாதிப்பு
வழுதூர் இரண்டாவது யூனிட் "கட்': மின் வினியோகம் பாதிப்பு
வழுதூர் இரண்டாவது யூனிட் "கட்': மின் வினியோகம் பாதிப்பு
ராமநாதபுரம்: வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையத்தின் இரண்டாவது யூனிட், கடந்த இரண்டு நாட்களாக செயல்படாததால், மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்படும் இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையத்தில் 2008 ல் இரண்டாவது யூனிட் செயல்பட துவங்கியது. இதன் மின்உற்பத்தி திறன் 92.2 மெகாவாட் ஆகும். துவக்கத்திலிருந்தே தொடர் பழுதால், இதுவரை அதன் மின் உற்பத்தி முழு அளவை எட்டியதே இல்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு 70 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கப்பட்டும், தொடர்ந்து பழுதாகி அதன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிர்வு அதிகம் ஏற்படுவதால், வாரக்கணக்கில் செயல்படாமல் நின்றது. இது குறித்து 'தினமலர் இதழில்' செய்தி வெளியானதை தொடர்ந்து, உடனடியாக இயக்க இன்ஜினியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இரண்டாவது யூனிட் மீண்டும் செயல்படவில்லை. இதிலிருந்து வெளியாகும் வெப்பம் நீராவியாக மாற்றப்பட்டு, அதிலிருந்தும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வெப்பம் 600 டிகிரி வரை இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் வெப்பம் செல்லும் பாய்லரில் உள்ள டியூப்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது 600 டிகிரிக்கும் மேல் வெப்பம் வெளியாவதால், பாய்லர் டியூப்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டு, இரண்டாவது யூனிட் நிறுத்தப்பட்டுள்ளது. இதை சரி செய்ய இத்தாலியிலிருந்து, அன்சால்டா குழுவினர் வரவேண்டும் என்பதால், செயல்பட பல நாட்களாகும், என கூறப்படுகிறது.