ADDED : செப் 06, 2011 01:27 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே. கோவில் வரவு, செலவு கணக்கு பார்த்த போது, இரு கோஷ்டியினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், காயமடைந்த ஏழு பேர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 27 ஆண்டுக்கு பின் கடந்த 28ம் தேதி மாரியம்மன், எல்லையம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று மதியம் 2 மணியளவில், கோவில் வளாகத்தில், தேர்த்திருவிழா தொடர்பாக நிர்வாக குழுவினர் முன்னிலையில் வரவு, செலவு கணக்குகள் சரிபார்த்தனர். அப்போது, தேர் மற்றும் கோவிலில் கட்டியிருந்த தேங்காய்கள் ஏலம் எடுப்பது தொடர்பாக இரு கோஷ்டியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சரவணக்குமார் (25), மணிகண்டன் (24), பொன்னுசாமி (26), மற்றொரு தரப்பை சேர்ந்த செந்தில்குமார் (38), போண்டோ வெங்கடேஷ் (32), ராஜா (28), துரைசாமி (45) ஆகிய ஏழு பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மல்லியக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


