ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : ''திருத்தங்கல் நகராட்சி பகுதியில்,தேவையான அடிப்படை வசதிகளை செய்வேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் தனலட்சுமி கூறினார்.திருத்தங்கல் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனலட்சுமி கூறியதாவது:திருத்தங்கல் நகராட்சிக்கு 2001ல் முதல்வர் ஜெயலலிதா மானூர் கூட்டுகுடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த குடிநீரைத்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர். அமைச்சர், எம்.எல்.ஏ., உதவியுடன் குடிநீர் அளவை அதிகரித்து, தினமும் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பேன். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டமும் கொண்டு வர முயற்சிப்பேன்.திருத்தங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தை ராஜேந்திரபாலாஜி எம்.எல்.ஏ., ஒத்துழைப்போடு, ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த பாடுபடுவேன். திருத்தங்கலில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்து தருவேன். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றுவேன். திருத்தங்கலை சுற்றுலா தலமாக்க பாடுபடுவேன். பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி மூலம் செய்து தருவேன். போக்குவரத்து நெரிக்கடியை குறைக்க, டிராபிக் பிரிவு துவக்க முயற்சிப்பேன். குப்பை இல்லா நகரமாக்குவேன். மரங்கள் நட்டு பசுமையான நகரமாக்குவேன். விளையாட்டு மைதானம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் உருவாக்கி தருவேன். நவீன பூங்கா அமைக்க பாடுபடுவேன். அனைத்து பகுதிகளுக்கும் தரமான தார்ரோடு, வாறுகால் , சிமென்ட் ரோடு வசதிகள் செய்வேன். சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து குரல்கொடுப்பேன். ராஜேந்திரபாலாஜி எம்.எல்.ஏ., உதவியுடன் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் நடைபெற்று வரும் பட்டாசு தொழிலை பாதுகாக்க முயற்சிப்பேன்.
சிவகாசி - திருத்தங்கல் பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டத்தை துவக்க முயற்சிப்பேன், என்றார்.


