Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊர்ப்புற நூலகங்கள் துவக்க எதிர்பார்ப்பு

ஊர்ப்புற நூலகங்கள் துவக்க எதிர்பார்ப்பு

ஊர்ப்புற நூலகங்கள் துவக்க எதிர்பார்ப்பு

ஊர்ப்புற நூலகங்கள் துவக்க எதிர்பார்ப்பு

ADDED : ஆக 20, 2011 11:48 PM


Google News
உடுமலை:குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் பகுதி நேர மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன; ஒன்றியத்திலுள்ள கிராமங்களில், இதுவரை ஒரு ஊர்ப்புற நூலகம் கூட துவங்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், 20க்கும் அதிகமான கிராமப்புற நூலகங்கள் துவங்கப்பட்ட போது, குடிமங்கலம் ஒன்றியத்திலும் துவக்க கோரிக்கை விடப்பட்டது. ஊர்ப்புற நூலகங்கள் துவங்க, 200 உறுப்பினர்கள் சேர்க்கை, இரண்டு புரவலர்கள், 5,000 மதிப்புள்ள தளவாடப் பொருட்கள், 5 சென்ட் காலியிடம், கட்டடம் ஆகியவற்றை ஊராட்சி நிர்வாகங்கள் தயார்படுத்தினால், நூலகம் செயல்பட நூலக ஆணை குழு அனுமதி அளிக்கிறது. இந்த விதிமுறைகளை செயல்படுத்த, ஊராட்சி நிர்வாகத்தினரிடையே ஆர்வமின்மை மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், ஊர்ப்புற நூலகங்கள் பகல் கனவாகவே மாறியுள்ளது. கல்வியாளர்கள் தரப்பில் கூறுகையில், 'ஊராட்சி நிர்வாகத்தினரிடையே ஊர்ப்புற நூலகங்கள் துவக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நூலக ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு 30 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படுகின்றன; இந்நூலகங்கள், முதற்கட்டமாக வழங்கப்படும் புத்தகங்களை மட்டும் வைத்து செயல்படுகின்றன.

வாசகர்கள், புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், குடிமங்கலம் ஒன்றியப் பகுதி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரிகள், குறிப்புதவி மற்றும் இதர புத்தகங்களுக்காக, உடுமலை, பொள்ளாச்சி நூலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது' என்றனர்.

எனவே, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், பகுதி நேர மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us