யானை மரணம் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு, "கேர்-எர்த்' மையம் அறிக்கை
யானை மரணம் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு, "கேர்-எர்த்' மையம் அறிக்கை
யானை மரணம் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு, "கேர்-எர்த்' மையம் அறிக்கை

சென்னை : 'யானை மரணம் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'கேர்-எர்த்' மையம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
கோவை வனக்கோட்டத்தில், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஒரு பெண் யானைக்கு, வெற்றிகரமாக 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்டு, அதன் நடமாட்டம் சாட்டிலைட் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி குடியிருப்புகளுக்குள் ஊடுருவும், ஆண் யானைக்கு இதைப் பொருத்த வனத்துறை திட்டமிட்டது.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில், பாலமலை பகுதியில் உலாவி வந்த ஆண் யானை ஒன்றுக்கு, இதைப் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்தது. அதன்பின் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகம் பகுதியில், செங்கல் சூளை அருகே உள்ள ஒரு யானைக்கு 'ரேடியோ காலர்' பொருத்த வனத்துறை முடிவு செய்தது.
இரவு நேரத்தில், யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்தி, 'ரேடியோ காலர்' பொருத்த முயன்ற போது, அந்த ஆண் யானை இறந்தது. யானை இறந்த தவகல் யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு முறையாக, 'ரேடியோ காலர்' பொருத்தும் பணியை செய்ய தவறிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை, 'கேர்-எர்த்' மையத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ரேடியோ காலர்' பொருத்தும் திட்டத்தை துவக்குவதற்கு முன், யானை ஆராய்ச்சியாளர்கள் ராமன் சுகுமார், ஈசா, அறிவழகன், ஆறுமுகம், சிவகணேசன், விஜயகுமரன் நாயர் போன்றவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் எந்த கருத்தும் கேட்கவில்லை.
யானைக்கு, 'ரேடியோ காலர்' பொருத்தும் திட்டத்தை நிறைவேற்ற நிரந்தரமான வழிமுறைகளை பின்பற்றவில்லை. யானைக்கு மயக்க மருந்து கொடுக்கும் முன், யானைக் கூட்டத்தின் எண்ணிக்கை பற்றிய தகவல் மற்றும் யானைக் கூட்டம் செல்லும் பாதைகளை பற்றிய தகவலை சேகரித்து, 'ரேடியோ காலர்' பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும்.
மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், யானை வயது, அதன் உடல் எடை மற்றும் உடல் நலம் ஆகியவற்றை கணக்கிட்டுதான் மருந்து அளித்திருக்க வேண்டும். மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில், மயக்க மருந்து செலுத்தி இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்க கூடாது. இது மட்டுமல்லாமல், 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்ட இடம் மேடு, பள்ளம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.
செங்கல் சூளை அருகே, யானைக்கு மயக்க மருந்து செலுத்தினால், அங்கு காணப்படும் பள்ளங்களால் யானை அடிப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. மயக்க மருந்து பகல் நேரத்தில் கொடுத்திருக்க வேண்டும். மாலையிலோ அல்லது இரவிலோ கொடுத்திருக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. இரவில் மயக்க மருந்து கொடுப்பது யானைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் குழுவினருக்கும் பேராபத்து விளைவிக்கும். தகுதியுடைய விலங்கின டாக்டரால் மயக்க மருந்து அளித்திருக்க வேண்டும். தனிநபரால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின், யானையை சரியான முறையில் கண்காணித்திருந்தால் அது அடிபட்டு இறந்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, இனிமேல் யானை மரணம் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


