ADDED : ஆக 22, 2011 10:57 PM

விருதுநகர் : ''ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மூன்று கைதிகளை காப்பாற்ற, முதல்வர் முன்வர வேண்டும்'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.
விருதுநகரில் நடந்த ம.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: உலகில் 135 நாடுகளில் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. அமெரிக்காவில் 8 மாகாணத்தில் மரண தண்டனை கிடையாது. இந்த மாகாணங்களில் தான் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன என, புள்ளி விவரத்துடன் தெரிவிக்க முடியும். 2004க்குப் பின்னர் இன்று வரை இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படவில்லை. தமிழக முதல்வர் இந்த மூவருக்கும் தண்டனை வழங்கப்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியாறு அணை இல்லை என்றால் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பாதிக்கப்படும். 80 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைப்பது பாதிக்கும். முல்லைப் பெரியாறு அணைக்கு தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும். கேரள அரசு கொண்டு வந்த அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார். மாவட்ட செயலர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.