திட்டங்களை நிறைவேற்றினால் மறுமலர்ச்சி ஏற்படும்
திட்டங்களை நிறைவேற்றினால் மறுமலர்ச்சி ஏற்படும்
திட்டங்களை நிறைவேற்றினால் மறுமலர்ச்சி ஏற்படும்
UPDATED : ஆக 13, 2011 01:06 AM
ADDED : ஆக 12, 2011 11:25 PM

சென்னை:''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினால், தமிழக பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்,'' என்று, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் நேற்று விஜயகாந்த் பேசியதாவது:இந்த அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் 50 வகையான இலவசத் திட்டங்களை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. நலிந்த பிரிவினருக்கு, இலவசத் திட்டங்கள் அவசியம் தேவை. பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறுவோர், கண்ணிருந்தும் பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்களே. கண்ணை மூடிக் கொண்டு, பட்ஜெட்டை பாராட்டி மகிழலாம். அந்தளவிற்கு, ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏழைகளை வாழ்விக்க, இரண்டு வகையான திட்டங்களை தீட்டலாம். ஒன்று, அவர்கள் வருமானத்தை பெருக்குவது, மற்றொன்று அரசு மானியத் தொகை வழங்குவதன் மூலம், அவர்கள் செய்யும் செலவுகளை குறைப்பது. தமிழக அரசு அளித்துள்ள சலுகைகள், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் வகையிலும், அதே நேரத்தில் வருமானத்தை பெருக்கும் வகையிலும் அமைந்துள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தும்போது, மூன்று குறைபாடுகள் காணப்படுகின்றன. ஒன்று, போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாதது. முதியோர்கள், ஏழைத் தாய்மார்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு, ஓய்வூதிய மனுக்களை வருவாய்த் துறையினரிடம் தரும் போது, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை எனக் கூறப்படுகிறது. இது உண்மை என்றால், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
இரண்டாவது, ஏழைகளை அடையாளம் காண்பதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். பயனாளிகளை கண்டறிய, அங்க அடையாள அடிப்படையில் அட்டைகள் வழங்க வேண்டும். மூன்றாவதாக, திட்டங்களை நிறைவேற்றும் போது, அதிகார வர்க்கத்தினர் லஞ்ச ஊழலில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே, ஏழைகளுக்காக வகுக்கப்படும் திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடையும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் இல்லை என்று முதல்வர் அறிவித்துள்ளார். பல நலத்திட்டங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டியிருப்பதால், அதற்கான பட்டியலை தயாரித்திட வேண்டும். ஏழைகளே இல்லாத நாடு, தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவது தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், உண்மையான ஏழைக் குடும்பங்களை கணக்கெடுக்கவும், வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்தவும், ஏழைக் குடும்பங்கள் வறுமையில் இருந்து விடுபடும் வரை அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதையும் தமிழக அரசு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 65 லட்சம் இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். 2015ம் ஆண்டில், 130 முதல் 150 லட்சம் வரை திறன்மிக்க பணியாளர்கள் கூடுதலாக தேவைப்படுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேவையை ஈடு செய்யும் வகையில், இந்த இளைஞர்களுக்கு தொழில் திறனை அளிக்க வேண்டியது அவசியமாகும். கல்லூரிகளில் தொழிற்பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.தி.மு.க., ஆட்சியில் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இலக்கு நிர்ணயித்து, 7.8 சதவீத வளர்ச்சியை கண்டனர். பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதத்திற்கும் மேலாக கொண்டு வர திட்டமிட்டு, தமிழக அரசு வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டிய துறை வேளாண்மைத் துறை தான்.
விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம், உற்பத்தியைப் பெருக்க முடியும். இன்று, விவசாயம் நலிந்த தொழிலாக மாறிவிட்டது. விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், வேலை தேடி நகரங்களுக்கு வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களாக இருப்பவர்கள், நகர்ப்புறங்களில் கட்டடத் தொழிலாளர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் மாறி வருகின்றனர்.எனவே, விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையிலான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலை கிடைக்கச் செய்வது, அரசின் கடமை. இதற்காக தனி கொள்கையை வகுக்க வேண்டும். முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட, விவசாயிகளுக்கு தரப்படும் மானியத்தைக் குறைக்க, உலக வணிக நிறுவனம் வற்புறுத்தியும் கூட, அவர்கள் மறுக்கின்றனர்.
வேறு எந்தப் பொருட்கள் உற்பத்தி செய்யாவிட்டாலும் சகித்துக்கொள்ள முடியும். ஆனால், உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டாத நாடு, தனது பாதுகாப்பையே இழக்க வேண்டி வரும் என்பது தான் வரலாறு.பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாக நிறைவேற்றினாலே, பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.


