ADDED : செப் 10, 2011 12:07 AM
மாமல்லபுரம் : காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த காதலர்கள், பூச்சி மருந்து குடித்து இறந்தனர்.
செய்யூர் அடுத்த பெரியகளக்காடி காலனியைச் சேர்ந்த, கர்ணன் மகன் ஆனந்தவேல், 20.
புதுச்சேரியில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் கோமதி, 17.
இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. உறவு முறையைக் கடந்து, இருவரும், கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இருவருடைய பெற்றோரும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன், இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். மகளைக் காணவில்லை என முருகேசன், செய்யூர் போலீசில் புகார் செய்தார்.
காதலர்கள் இருவரும், 8ம் தேதி, கூவத்தூர் அடுத்த சீக்கினாங்குப்பத்தில் உள்ள உறவினர் பெருமாள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளனர். அவர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த இருவரும், அன்று இரவு 7 மணிக்கு, பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தனர். அருகிலிருந்தோர், அவர்களை சிகிச்சைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில், இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
கூவத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


