/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/"சிட்டா' இருந்தால் மட்டுமே நெல் விற்கலாம் :அரசு கொள்முதல் நிலையங்களில் கெடுபிடி"சிட்டா' இருந்தால் மட்டுமே நெல் விற்கலாம் :அரசு கொள்முதல் நிலையங்களில் கெடுபிடி
"சிட்டா' இருந்தால் மட்டுமே நெல் விற்கலாம் :அரசு கொள்முதல் நிலையங்களில் கெடுபிடி
"சிட்டா' இருந்தால் மட்டுமே நெல் விற்கலாம் :அரசு கொள்முதல் நிலையங்களில் கெடுபிடி
"சிட்டா' இருந்தால் மட்டுமே நெல் விற்கலாம் :அரசு கொள்முதல் நிலையங்களில் கெடுபிடி
ADDED : செப் 06, 2011 01:33 AM
கோபிசெட்டிபாளையம்:விவசாயிகளிடம் 'சிட்டா' இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என, அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் கொண்டு வந்த நெல் மூட்டைகளை திருப்பி எடுத்துச் செல்லும் அவலநிலை உள்ளது.
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் சென்ற 10 நாட்களாக நெல் அறுவடை பணி மும்முரமாக நடக்கிறது. இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணி நடப்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் ஒரே நாளில் அறுவடை செய்யப்படுகிறது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்குட்பட்ட பொலவகாளிபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், டி.என்.பாளையம், காசிபாளையம், அத்தாணி, புதுக்கரைபுதூர், கள்ளிபட்டி, கூகலூர் ஆகிய ஒன்பது இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ சன்ன ரகத்துக்கு 11 ரூபாயும், குண்டு ரகத்துக்கு 10.50 ரூபாயும் விலை தரப்படுகிறது. சென்றாண்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில வியாபாரிகள் வந்து, நெல் கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் 15 ரூபாய் வரை விலை கிடைத்தது. நடப்பாண்டு வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. அரசு கொள்முதல் நிலையங்களை நம்பியே விவசாயிகள் உள்ளனர். நெல் கொள்முதல் நிலையம் திறப்பின் போது வேளாண் அமைச்சர் செங்கோட்டையன், 'நெல் விற்க வரும் விவசாயிகள் வி.ஏ.ஓ., சான்றிதழ் கொண்டு வந்தால் போதும்' என, கூறியிருந்தார். ஆனால், 'சிட்டா கொடுத்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும்' என, கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், நெல்லை விற்க முடியாத நிலையில் பல விவசாயிகள் உள்ளனர். கோபியில் ஒன்பது இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்த போதும், கூகலூர், பொலவகாளிபாளையம் ஆகிய இரு இடங்களில் மட்டுமே 200 முதல் 250 மூட்டை வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. ஈரத்தன்மை அதிகமாக இருப்பதாக உள்ளதாக கூறி நெல்லை வாங்கவில்லை. ஒரு சில விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் உள்ள பதரை, ' வினோயிங்' மிஷின் மூலம் சுத்தம் செய்து, அதன் பிறகே நெல் அளவீடு செய்யப்படுகிறது. விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் சென்றாண்டு, வி.ஏ.ஓ., சான்று மட்டும் பெறப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு சிட்டா நகல் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலரது நிலங்கள், அவர்களின் தந்தை, தாத்தா பெயரிலேயே உள்ளன. இவ்வாறான நிலையில் எங்களுடைய பெயரில் சிட்டா கேட்டால், நாங்கள் எங்கு சென்று சிட்டா வாங்கி வருவது? பொலவகாளிபாளையம் கொள்முதல் நிலையத்தில் தார்ப்பாய், கான்கிரீட் கூரை வசதி இல்லை. மழை பெய்ததால் பூமி ஈரப்பதமாக உள்ளது. நெல் மூட்டையை கீழே இறக்கி வைத்தால், பூமியில் உள்ள ஈரத்தன்மை நெல் மூட்டைக்குள் செல்லும் நிலை உள்ளது. பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. சென்றாண்டு போல், 'வி.ஏ.ஓ., சான்றிதழ் இருந்தால் நெல் வாங்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


