Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சமச்சீர் கல்வி சர்ச்சைகள் உள்ளாட்சி தேர்தலை பாதிக்குமா...?

சமச்சீர் கல்வி சர்ச்சைகள் உள்ளாட்சி தேர்தலை பாதிக்குமா...?

சமச்சீர் கல்வி சர்ச்சைகள் உள்ளாட்சி தேர்தலை பாதிக்குமா...?

சமச்சீர் கல்வி சர்ச்சைகள் உள்ளாட்சி தேர்தலை பாதிக்குமா...?

ADDED : ஆக 06, 2011 11:08 PM


Google News
Latest Tamil News
சென்னை: சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதில் உள்ள சர்ச்சைகள், வரும் உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை பின்னுக்கு தள்ளக் கூடாது, என்பதற்காக, அ.தி.மு.க., சார்பில் புதிய 'மாஸ்டர் பிளான்' போடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் பேராதரவுடன் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, அதே வேகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மையை நிரூபிக்க பலகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதற்கென தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, திட்டங்கள் கட்சியின் தலைமையில் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம்; தரமான சமச்சீர் கல்வியை அளிக்க மாற்றங்கள் அவசியம் என்ற அரசின் பிடிவாதம்; இது தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு போன்ற சம்பவங்கள் மாணவ, மாணவியரின் கல்வியை பாதித்து வருகிறது.

இத்தகைய 'மன உளைச்சல்கள்' அரசின் மீது சற்று அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய இடர்பாடுகளில் இருந்து வெளிவந்து, உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் வியூகமாக உள்ளது. இதற்கென புதிய வரைவு 'மாஸ்டர்பிளான்' திட்டத்தை கட்சி தலைமை போட்டுள்ளது.

இதன்படி, அண்ணா பிறந்தநாளான செப்.,15ம் தேதி, ஏற்கனவே தேர்தலின் போது அறிவித்தபடி இலவச அறிவிப்பின் முக்கிய அம்சமான 'கிரைண்டர், மிக்சி, மின்விசிறி' ஆகியவற்றை, மக்களுக்கு வழங்கும் திட்டத்தை துவக்குவது; அதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளில், அரசியல் சாராத ஏழை மக்களில் 50 முதல் 100 பேருக்கு தரமான பொருட்களை முதற்கட்டமாக வழங்குவது என, திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதைதவிர, ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுவினர் மத்தியிலும் இந்த பொருட்களின் தரம் குறித்து விளக்கி,'தேர்தலில் ஆளும் கட்சி வென்றால் மட்டுமே, இந்த பொருட்கள் முழுமையாக கிடைக்கும்; வரும் 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வார்டுகளுக்கு வரும்,' என்ற பிரசாரத்தை பரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில், சமச்சீர் கல்வியை தரமாக செயல்படுத்தவும்; இதை வைத்து அரசுக்கு எதிராக பெற்றோரிடம் பிரசாரம் செய்யும் கட்சிகளின் செயல்பாடுகள் 'நீர்த்துபோகும்' படியாக, மாணவர்களுக்கு 'லேப்-டாப்' மட்டுமல்லாமல், 10ம் வகுப்பு மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு விரைவில் தயாராகும் படியான சிறப்பு வகுப்புகளை செயல்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில், உள்ளாட்சி தேர்தலின் அனைத்து செயல்பாடுகளையும், அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலமும், அரசின் திட்டங்களை, மாநில அமைச்சர்களின் மூலமும், குழப்பமில்லாமல் செயல்படுத்தவும் அ.தி.மு.க.வின் சிறப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இத்திட்டம் நினைத்தபடி செயல்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவுகள் வார்டு கிளை செயலர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளன.

நமது சிறப்பு நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us