Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிண்டி தொழில் பயிற்சி மையத்தில் படிக்க பிற மாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

கிண்டி தொழில் பயிற்சி மையத்தில் படிக்க பிற மாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

கிண்டி தொழில் பயிற்சி மையத்தில் படிக்க பிற மாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

கிண்டி தொழில் பயிற்சி மையத்தில் படிக்க பிற மாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

ADDED : ஆக 01, 2011 01:42 AM


Google News

சென்னை : தொழில் பயிற்சி ஆசிரியர் மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு, பிற மாநிலங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதால், உத்தர பிரதேசம், பீகார் உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள், சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு தொழில் பயிற்சி ஆசிரியர் (பயிற்றுனர்) மையத்தில் சேர்ந்துள்ளனர்.இம்மையத்தில், கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 300 இடங்களில், நேற்று மாலை வரை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 230 பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்திலிருந்து 34 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.இந்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் சார்பில், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், ஐந்து இடங்களில் மத்திய தொழில் பயிற்சி ஆசிரியர் மையம் (சி.டி.ஐ.,) இயங்கி வருகின்றன.



பிட்டர், இயந்திரப் பணியாளர், மின் பதிவாளர், டர்னர், டூல்ஸ் அண்ட் டை மேக்கர்ஸ், டீசல் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளுக்கான பயிற்சி இம்மையங்களில் அளிக்கப்படுகின்றன. ஐ.டி.ஐ., அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்கள், இம்மையங்களில் சேர்ந்து படிக்கலாம்.இங்கு ஓராண்டு பயிற்சி முடிந்ததும், தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் (என்.சி.வி.டி.,) மூலம் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்கள் ஐ.டி.ஐ., பயிற்சி மையங்களில் தொழில் பயிற்சி ஆசிரியர்களாக பணியாற்றலாம்.இம்மையங்களில் பயிற்சி முடித்தவர்களுக்கு, உத்தர பிரதேசம், அரியானா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதால், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் போட்டி போட்டுக் கொண்டு, கிண்டி மையத்திற்கு படிக்க வருகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த 90 சதவீதம் மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர்.



பிற மாநிலங்களைப் போல, தமிழக அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படாததால், தனியார் ஐ.டி.ஐ.,களில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு ஆசிரியர் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு படித்து முடித்துள்ள 1,300 பேருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, இம்மையத்தில் முன்னர் படித்து முடித்துள்ளவர்கள் புலம்புகின்றனர். இந்நிலையால் இம்மையத்தில் சேர்ந்து படிக்க, தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது.'அரசு சி.டி.ஐ., மையங்களில் தொழில் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு, மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவது போல, தமிழகத்திலும் அரசு ஐ.டி.ஐ.,களில் தொழில் கல்வி ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.தமிழக அரசு, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்' என்று கிண்டி மையத்தில் தொழில் கல்வி ஆசிரியர்கள் பயிற்சி முடித்துள்ள, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us