விண்ணில் பாய்கிறது "மெகா ட்ராபிக்ஸ்'
விண்ணில் பாய்கிறது "மெகா ட்ராபிக்ஸ்'
விண்ணில் பாய்கிறது "மெகா ட்ராபிக்ஸ்'
ADDED : அக் 08, 2011 12:42 AM
சென்னை :இந்தியா-பிரான்ஸ் இணைந்து தயாரித்துள்ள, 'மெகா ட்ராபிக்ஸ்' என்ற புதிய செயற்கைக் கோள், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, வரும் 12ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து வெப்ப மண்டல பகுதியில், பருவ நிலை மாற்றத்தில் நீர் சுழற்சியின் பங்கு குறித்து, ஆய்வு செய்ய, 'மெகா ட்ராபிக்ஸ்' என்ற புதிய செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய செயற்கைக் கோள், 80 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயற்கைக் கோள், வெப்ப மண்டல பகுதியில், பருவ நிலை மாற்றத்தில் நீர் சுழற்சியின் பங்கு குறித்து, ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக் கோளுடன், ஐ.ஐ.டி., கான்பூர், எஸ்.ஆர்.எம்., சென்னை மற்றும் லக்சம்பர்க் ஆகிய பல்கலைக் கழகங்கள் தயாரித்த, மூன்று நானோ செயற்கைக் கோள்களும் இணைந்து விண்ணில் ஏவப்படுகின்றன. கான்பூர், ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய, நானோ செயற்கைக் கோள், 'ஜூகுனு' வெள்ளம், வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்கள் மற்றும் படங்களை அனுப்பும். இத்தகவல்கள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.இந்த செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., 'சி18' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, வரும், 12ம் தேதி காலை, 11 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான,'கவுன்ட் டவுன்' வரும் 10ம் தேதி காலைதுவங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


