/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரூ.83 ஆயிரத்துக்கு கவுன்சிலர் பதவி ஏலம்?ரூ.83 ஆயிரத்துக்கு கவுன்சிலர் பதவி ஏலம்?
ரூ.83 ஆயிரத்துக்கு கவுன்சிலர் பதவி ஏலம்?
ரூ.83 ஆயிரத்துக்கு கவுன்சிலர் பதவி ஏலம்?
ரூ.83 ஆயிரத்துக்கு கவுன்சிலர் பதவி ஏலம்?
ADDED : அக் 03, 2011 01:41 AM
பனமரத்துப்பட்டி: 'பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 3வது வார்டு கவுன்சிலர் பதவி, 83 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதால், ஊர் கட்டுப்பாட்டை மீறி யாரும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என, மிரட்டினர்.
அதனால், வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை' என, தே.மு.தி.க.,வினர் பகிரங்க குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 3வது வார்டில், 443 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, தங்களுக்குள் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்கின்றனர். இவர்கள் தேர்வு செய்யும் வேட்பாளருக்கு போட்டியாக, யாரும் மனு தாக்கல் செய்யக் கூடாது என, ஊர் கட்டுப்பாடு விதிக்கின்றனர்.
ஊர் கட்டுப்பாட்டை மீறி, 3வது வார்டில், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இதுவரை நிறுத்தியதில்லை. 3வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க.,வில் சுப்ரமணி, தே.மு.தி.க.,வில் நடராஜ் என, கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், தி.மு.க., சார்பில், 3வது வார்டில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தே.மு.தி.க., வேட்பாளர் நடராஜை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல், ஊர் பிரமுகர்கள் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
பனமரத்துப்பட்டி தே.மு.தி. க., நகர செயலாளர் சீனிவாசன், 3வது வார்டு செயலாளர் நடராஜ் ஆகியோர் கூறியதாவது: பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 3வது வார்டில், நடராஜ் போட்டியிட கட்சி தலைமை 'சீட்' வழங்கியது. ஊர் கூட்டத்தில், கவுன்சிலர் பதவி, 83 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊர் கட்டுப்பாட்டை மீறி யாரும் மனுதாக்கல் செய்யக் கூடாது என, மிரட்டினர். அதனால், தே.மு.தி.க., சார்பில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. மூன்றாவது வார்டில், மொத்தம் உள்ள, 443 ஓட்டில், 170 பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர். பலமுறையாக, ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடக் கூடாது என, ஊர் கட்டுப்பாடு வைத்துள்ளனர். இதனால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுரிமை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஊர் கட்டுப்பாட்டுக்கு பயந்து, 3வது வார்டில் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஊர் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர், அவருக்கு போட்டியாக 'டம்மி' வேட்பாளர் ஒருவர் என, இருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 'டம்மி' வேட்பாளர் வாபஸ் வாங்கிக் கொண்டு, போட்டியின்றி வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கு, தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
பேரூராட்சி தலைவர் வேட்பாளர் ரவி, அவை தலைவர் வக்கீல் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட நிர்வாகி ஈஸ்வரன், வார்டு வேட்பாளர்கள் முருகேசன், வேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


