புடவை, ஜாக்கெட் மொத்த கொள்முதல் அதிகரிப்பு:தமிழக வியாபாரிகள், கட்சியினர் படையெடுப்பு
புடவை, ஜாக்கெட் மொத்த கொள்முதல் அதிகரிப்பு:தமிழக வியாபாரிகள், கட்சியினர் படையெடுப்பு
புடவை, ஜாக்கெட் மொத்த கொள்முதல் அதிகரிப்பு:தமிழக வியாபாரிகள், கட்சியினர் படையெடுப்பு
ADDED : அக் 08, 2011 10:10 PM

ஈரோடு:தமிழக வியாபாரிகளும், கட்சியினரும், புடவை, வேட்டியை அதிகளவில் வாங்கிச் செல்வதால், ஈரோட்டில் மொத்த கொள்முதல் விற்பனை அதிகரித்துள்ளது.தமிழகத்தில், அக்., 17 மற்றும் 19ல், உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சையாக களமிறங்கும் உள்ளூர் பிரமுகர்களும், தங்கள் பகுதியில் உள்ள ஓட்டு வங்கியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.மாநில அளவில் தேர்தல் நடப்பதால், தேர்தல் கெடுபிடிகள் அதிகம் இல்லை. இதனால், நண்பர்கள், உறவினர்கள் மூலம், பணம், புடவை, ஜாக்கெட் மற்றும் வேட்டி பட்டுவாடா செய்ய, வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஈரோட்டில் நடந்த ஜவுளி சந்தையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தமிழக அளவிலான வியாபாரிகளே அதிகம் முகாமிட்டனர். ஒரு சிலர் நேரடியாக, புடவை, ஜாக்கெட் குடோனுக்கு சென்று ஆர்டர் கொடுத்து, விரைவில் கிடைக்க வேண்டும் என, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூறிச் செல்கின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷன் கெடுபிடியால், தேர்தலுக்கு முன்கூட்டியே தயார் நிலையில் இருந்த கட்சி கரை வேட்டிகள், புடவை மற்றும் துண்டுகள் தேக்கம் அடைந்தன.உள்ளாட்சித் தேர்தலில், மாநில தேர்தல் கமிஷன் விதிமுறைகளை கடுமையாக்காததால், வேட்பாளர்கள் அதிகளவு ஜவுளி கொள்முதல் செய்கின்றனர். சிலர், முன்பணம் கொடுத்து, ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். பெரும்பாலும், பெண் வாக்காளர்களை கவரும் விதத்தில் புடவை, ஜாக்கெட்டுக்குத் தான், வேட்பாளர்கள் அதிகம், 'ஆர்டர்' கொடுக்கின்றனர். மொத்தத்தில் நடப்பு வார ஜவுளி சந்தையில், வெளிமாநில வியாபாரிகளை விட, தமிழக வியாபாரிகளும், கட்சியினரும் தான் அதிகமாக ஜவுளி கொள்முதல் செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.


