"எதிர்காலத்தில் அ.தி.மு.க.,வினருக்கும் இதே கதிதான்': "அனிதா' எச்சரிக்கை
"எதிர்காலத்தில் அ.தி.மு.க.,வினருக்கும் இதே கதிதான்': "அனிதா' எச்சரிக்கை
"எதிர்காலத்தில் அ.தி.மு.க.,வினருக்கும் இதே கதிதான்': "அனிதா' எச்சரிக்கை

திருச்சி: ''சிறையில், வயது முதிர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் படும் இன்னல்களை எல்லாம் பார்க்கும்போது, இந்த இன்னல்களை, வர இருக்கும் காலத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் சந்திப்பர்'' என, கொலை முயற்சி வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே வந்த, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை மாவட்ட தி.மு.க., செயலர் தளபதி பிறந்தநாள் அன்று, ஆறுமுகநேரி தி.மு.க., நகரச் செயலர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்திய வழக்கு, அவரது 'டாஸ்மாக்' பாரை தாக்கி, தீ வைத்த வழக்கு, அவரது கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கு என்பன உட்பட மூன்று வழக்குகளில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க., ஆட்சி, பொய்யான வழக்குகளைப் போட்டு, தி.மு.க., தலைவர்களையும், செம்மையாகப் பணியாற்றக் கூடிய செயல் வீரர்களையும் உள்ளே தள்ளி வருகிறது. அந்த வகையில், நானும் கைது செய்யப்பட்டு, 37 நாள் சிறையில் இருந்துள்ளேன். ஆனால், 32 நாள் தான் நீதிமன்றத்தில் பெயில் கொடுக்காமல் இருந்தது. 5 நாள் சிறை நிர்வாகத்தின் காரணமாக, நான் பெயிலில் வரமுடியாத அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்தினர். ஒரு எப்.ஐ.ஆர்., நம்பர் கொடுத்து வெளியே விடலாம். ஆனால், ஒரு நம்பர் விடுபட்டதாகக் கூறி, வேண்டுமென்றே என்னை ஐந்து நாள் சிறையில் வைத்த பெருமை, சிறை நிர்வாகத்துக்குத் தான் சேரும். இதற்காக, நான் கோர்ட் செல்ல உள்ளேன். சிறை நிர்வாகம், எனக்கு பதில் சொல்லியாக வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம் படும் இன்னல்களைப் பார்க்கும்போது, இந்த இன்னல்களை வர இருக்கும் காலத்தில், இன்றைய ஆட்சியாளர்கள் சந்திப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறையில் மருத்துவ வசதி இல்லை. மனரீதியாக டார்ச்சர் கொடுக்கின்றனர். தரையில் படுத்து எழுந்திருக்க முடியாமல், 74 வயதான வீரபாண்டி ஆறுமுகம் சிரமப்படுகிறார். எது கேட்டாலும் அங்குள்ள சிகிச்சை மட்டும் தான் தருகின்றனர். 74 வயதுக்காரருக்கு போதிய சிகிச்சை அங்கு தரப்படுவதில்லை. இவ்வாறு, அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
வரவேற்க ஆளில்லை: முக்கிய தி.மு.க.,வினர் கைதாகி உள்ளே சென்றால், கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து, ஆறுதல் கூறும் தி.மு.க.,வினர், நேற்று வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனை பார்க்க வரவில்லை. 'இன்று (நேற்று) 'ரிலீஸ்'ஆகி வரும் உங்களைப் பார்க்க, தி.மு.க.,வினர் யாரும் வரவில்லையே?' என்று நிருபர்கள் கேட்டபோது, ''நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்களே! நீங்கள் அனைவரும், தி.மு.க.,காரங்க தானே?'' என்று விரக்தியுடன் கூறி, சிரித்தபடியே சென்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.