"மின் உற்பத்தியில் ஆந்திராவை விட தமிழகம் மோசம்'
"மின் உற்பத்தியில் ஆந்திராவை விட தமிழகம் மோசம்'
"மின் உற்பத்தியில் ஆந்திராவை விட தமிழகம் மோசம்'
ADDED : ஆக 30, 2011 12:28 AM
சென்னை : தமிழகத்தில், மின்வெட்டை தீர்ப்பதற்காக எடுக்கும் சரியான நடவடிக்கைகள் குறித்து, மனு தாக்கல் செய்யுமாறு, தமிழக மின்வாரியத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதில், ஆந்திராவை விட, தமிழக மின் உற்பத்தி மோசமாக உள்ளதாக கூறியுள்ளது. தமிழகத்தில், மின் பற்றாக்குறையால், அடுத்த ஆண்டு ஜூன் வரை மின்வெட்டை நீட்டிக்க அனுமதி கேட்டு, தமிழக மின்வாரியத்தின் சார்பில், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை, ஆணைய உறுப்பினர்கள் நாகல்சாமி மற்றும் வேணுகோபால் விசாரித்தனர். அப்போது, தமிழக மின்வாரிய சேர்மன், மின்தொடரமைப்பின் மேலாண் இயக்குனர் மற்றும் இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டனர். கடந்த 19ம் தேதி, மின்வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா, மின்தொடரமைப்பு கழக மேலாண் இயக்குனர் முருகன் மற்றும் இயக்குனர் அக்ஷய்குமார் ஆகியோர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தனர். பின், தமிழக மின்வாரிய மனு மீது, ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அடுத்த ஆண்டுக்குள், 4,640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யும் திட்டங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்த தேவையான மின்தொடர் இணைப்புகள், துணை மின்நிலையங்கள் தொடர்பான திட்ட விவரங்களை, மின்வாரியம் விரிவாக சமர்ப்பிக்க வேண்டும். புதிய தொலைநோக்கு திட்டங்கள் குறித்து, மின்வாரியம் அளித்த மனுவில், கடலூர் மின்உற்பத்தி திட்டம் மற்றும் தூத்துக்குடி ஸ்பிக் மின் உற்பத்தி திட்டம் குறித்து கூறவில்லை. இந்த திட்டங்களையும் மின்வாரியம் கவனத்தில் எடுக்க வேண்டும். தெற்கு மண்டல மின்வினியோக மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, ஆந்திராவில், அனல், நீர், காஸ் மற்றும் நாப்தா முறை மின் உற்பத்தி அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. இதை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மின் உற்பத்தி மிகக்குறைவாக இருக்கிறது. காற்றாலை மின்சாரம் நிலையில்லாமல் இருந்தாலும், அதிகமாக கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த, தமிழக மின்வாரியம் என்ன திட்டம் வைத்துள்ளது. இதுகுறித்து, விரிவான திட்ட செயல் விவரங்கள் அடங்கிய மனுவை, வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. செப்., 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய கெடு! தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவில் கூறியிருப்பதாவது: புதிய மின் உற்பத்தி மூலம், தரமான, சீரான மின்சப்ளைக்கு தேவையான மின்தொடரமைப்பு, கேபிள்கள் பதித்தல், விவசாயம், தொழிற்சாலை மற்றும் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றுக்கு, எந்த வகையான தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப் போகிறீர்கள் என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். மின்வெட்டை நீண்ட கால நடவடிக்கையாக மேற்கொள்ள முடியாது. மின்வெட்டை ரத்து செய்யவும், மின்னழுத்த பிரச்னைகளை தீர்க்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கையை, செப்., 20ம் தேதிக்குள், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முகாமை விட்டு வெளியே செல்ல அகதிகளுக்கு தடை : மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து, அகதிகள் முகாமில் ஏதேனும் எதிர்ப்புகள் உள்ளதா, என 'கியூ' பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மூவரின் தூக்கு தண்டனைக்கு தமிழகத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ள அகதிகள் மத்தியில் ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதா? அகதிகள் 'பிட்' நோட்டீஸ் வினியோகம் செய்கின்றனரா, என 'கியூ' பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தூக்கு தண்டனை குறித்து அகதிகள் மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லை. வழக்கம்போல் அவர்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள செப்.,9க்கு முன், முகாம்களில், வருகை பதிவேட்டின்படி அகதிகள் அனைவரும் தங்கியுள்ளனரா, என சோதனை மேற்கொள்ளப்படும். இரண்டு தினங்கள் அகதிகள் வெளியே செல்ல தடைவிதிக்கப்படலாம், என்றார்.


