பள்ளிப்பட்டு : பிளஸ் 2 மாணவியை, பள்ளியில் ஈவ் - டீசிங் செய்த, அதே வகுப்பு மாணவனை, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அந்த மாணவி, உடனிருந்த தோழிகளை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் தாமோதரனிடம் புகார் தெரிவித்தார். ஈவ் - டீசிங் செய்த மாணவனை தலைமை ஆசிரியர் கண்டிக்காததால் பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து மாணவியே, பொதட்டூர்பேட்டை போலீசில், 30ம் தேதி புகார் கொடுத்தார். இப்புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் (1ம் தேதி) அக்கிராமத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெற்றோர், தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி கிருபாகரன், பள்ளி ஆய்வாளர் ராமமூர்த்தி, பள்ளிப்பட்டு தாசில்தார் தட்சிணாமூர்த்தி, ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்த் மற்றும் போலீசார் வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தலைமை ஆசிரியர் தாமோதரனை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதற்கு, பள்ளி கல்வித் துறை இயக்குனருக்கு பரிந்துரை கடிதம் அனுப்புவதாகவும், தற்சமயம் அருகிலுள்ள பள்ளிக்கு தற்காலிக மாறுதல் அளித்து அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பெற்றோர், அமைதியுடன் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் விளைவாக, மாணவி கொடுத்த புகாரின் பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார், ஈவ் - டீசிங் செய்த மாணவன் சோபன்பாபுவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளிப்பட்டு பகுதியில், ஈவ் - டீசிங் செய்த மாணவன் கைது செய்யப்பட்டது, இதுவே முதல் முறை என்பதால், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மற்ற மாணவர்களுக்கும், இச்சம்பவம் பாடமாக அமையும் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.


