/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கம்பன் எக்ஸ்பிரஸ் அபாயசங்கிலி இழுப்பு: இன்ஜின் பழுதால் ரயில்கள் தாமதம்கம்பன் எக்ஸ்பிரஸ் அபாயசங்கிலி இழுப்பு: இன்ஜின் பழுதால் ரயில்கள் தாமதம்
கம்பன் எக்ஸ்பிரஸ் அபாயசங்கிலி இழுப்பு: இன்ஜின் பழுதால் ரயில்கள் தாமதம்
கம்பன் எக்ஸ்பிரஸ் அபாயசங்கிலி இழுப்பு: இன்ஜின் பழுதால் ரயில்கள் தாமதம்
கம்பன் எக்ஸ்பிரஸ் அபாயசங்கிலி இழுப்பு: இன்ஜின் பழுதால் ரயில்கள் தாமதம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அபாய சங்கிலியை பயணி ஒருவர் பிடித்து இழுத்ததால் ரயில் இன்ஜினில் பழுது ஏற்பட்டது.
இந்நிலையில், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று அதிகாலை 5.05 மணிக்கு வரவேண்டிய கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.55 மணிக்கு வந்தது. ரயில் வந்ததும் ஏராளமான பயணிகள் இறங்கினர். 7.57க்கு ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென கண்விழித்து பார்த்தபோது கும்பகோணத்தில் இறங்க விட்டுவிட்டுமோ என கருதி உடனடியாக அடித்து பிடித்து எழுந்தார். அப்போது ரயில் வேகம் எடுக்கத் துவங்கியதால் அவர் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனடியாக ரயில் நின்றதும், ரயிலில் இருந்து அந்த பயணியும், அவரது மனைவியும் இறங்கினர். இதையடுத்து ரயில் புறப்படத்தயாரான போது, திடீர் பிரேக் காரணமாக இன்ஜினில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தொழில்நுட்ப பணியாளர்கள் 40 நிமிடம் போராடி அதை சீரமைத்தனர்.
தொடர்ந்து காலை 8.35 மணிக்கு ரயில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டுச் சென்றது. பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தொடர்பாக போலீஸார் விசாரித்த போது அவர் கும்பகோணத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் கமலநாதன் என்பதும், அவருடைய மனைவி அக்ஷயவதி என்பதும் தெரியவந்தது. பின்னர் ரயில்வே போலீஸார் அவரை விசாரித்து விசாரணை அறிக்கை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த பேப்பரை கமலநாதன் பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். பின்னர் போலீஸார் அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி விசாரணை அறிக்கை பேப்பரை வாங்கிக் கொண்டனர்.
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பழுதால், சென்னை- கும்பகோணம் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் சுந்தரபெருமாள்கோயிலிலும், மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆடுதுறையிலும், திருச்சி மயிலாடுதுறை பாசஞ்சர் திட்டை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. கம்பன் எக்ஸ்பிரஸில் பழுது நீக்கப்பட்டதை அடுத்து அனைத்து ரயில்களும் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதற்கிடையில் கும்பகோணம்-தஞ்சாவூர் (ராக்போர்ட்) பாசஞ்சர் ரயில் தாமதமானதால் மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை வரை பாசஞ்சராக இயக்கப்பட்டது.


