Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வடகிழக்கு பருவமழைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

வடகிழக்கு பருவமழைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

வடகிழக்கு பருவமழைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

வடகிழக்கு பருவமழைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 12, 2011 11:29 PM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் 686.89 மி.மீ., மழை பெய்கிறது. இதில், தென்மேற்கு பருவமழை காலங்களான ஜூன் முதல் செப்டம்பர் வரையில் 366.2 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை காலங்களான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 311.6 மி.மீட்டர் மழை பெய்யும்.சமீப காலமாக பருவ மழை தவறி பெய்து வருவதால், விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் நீர் ஆதாரங்களில் நீர் சேமிப்பு கேள்விக்குறியாகி இருந்து வருகிறது. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் முதல் வாரத்திலும் பெய்தது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் பெய்த மழையால் நீர் ஆதாரங்களில் நீர் சேமிப்பு கேள்விக்குறியானது.இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் மூலம் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக நீர் சேமிப்பு இல்லை. நீர் ஆதாரங்களில் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிப்பு எப்போதும் இருக்கும். இந்தாண்டு 50 சதவீதம் வரை மட்டுமே நீர் சேமிப்பு இருந்த போதும், தொடர்ந்து கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி எடுத்ததால், மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் 10 சதவீதம் நீர் சேமிப்பு குறைந்து தற்போது 30 முதல் 40 சதவீதம் வரையில் மட்டுமே நீர் சேமிப்பு உள்ளது.பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட தாலுகா பகுதியில் குறிப்பிட்டு சொல்லும்படியாக மழையின்மை காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இறவை பாசன பகுதியில் கடந்த மாதம் வரையில் நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இறவை பாசன விவசாயம் கைகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.இதனால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே துவங்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால், தொடர்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் மழை கைகொடுக்காத நிலையில் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.அதே நேரம் அக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பெய்யும் மழையை பொறுத்தே மாவட்டத்தல் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும் நிரம்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், வழக்கம் போல் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.சில பகுதியில் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து நீர் ஆதார கால்வாய்கள், நீர் போக்கு பாதைகள் உள்ளிட்டவைகளை சீர் செய்து தயார் செய்து வைத்துள்ளனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல நீர் ஆதாரங்களும் நீர் சேமிப்பை கணக்கிட்டு நீர் வழிக்கால்வாய்களை தயார் செய்து வைத்துள்ளனர். வரும் நாட்களில் பெய்யும் மழையை பொறுத்தே வரும் ஆண்டில் விவசாய தேவைக்கான நீர் சேமிப்பு இருக்கும் என்பதால், வடகிழக்கு பருவ மழைக்கு விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us