
'எய்ம்ஸ்' மருத்துவமனை போல உருவாக...
டாக்டர்.எஸ்.எஸ்.அர்த்தநாரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, 'எய்ம்ஸ்'க்கு நிகரான மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாக மாற்றி அமைக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, ஒரு இனிப்பான செய்தி.சென்னை பொது மருத்துவமனை ஆரம்பித்து, 150 ஆண்டுகள் ஆகின்றன.
உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும், தனிச் சிறப்பு பெற்ற மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர். அத்தனை ஸ்பெஷலிஸ்டும், சென்னை பொது மருத்துவமனையில் உள்ளனர். ஆனால், மருத்துவமனை மட்டும், எந்த வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது.இதில், இரண்டாயிரம் உள்நோயாளிகள், ஆயிரக்கணக்கான புற நோயாளிகள், தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நேரத்தில், முதல்வரின் இத்தகைய அறிவிப்பு, எல்லா தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
டில்லி எய்ம்ஸ், சண்டிகார் பி.ஜி.சென்டர், திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவமனைகளை போல, அங்குள்ள சட்டத் திட்டங்களைப் போல இங்கும், தனி நிர்வாகமாக்கி, அதிகாரத்தை போர்டு குழுவுக்கு கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு, தனியாக தன்னாட்சி அமைப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். கருவிகள் வாங்குவது, மருத்துவரை நியமிப்பது போன்றவற்றில், அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும், மருத்துவர்களைப் பற்றியும், அதிகாரிகளைப் பற்றியும் உளவுப் பார்க்க, உளவுத்துறை அலுவலர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான், 'எய்ம்ஸ்' போன்ற சிறந்த மையம் உருவாகும்.
நேரமேஇல்லை!
நலத் திட்டங்களுக்கு வேண்டிய புள்ளி விவரங்களைச் சமர்ப்பிக்கவே, வருவாய்த் துறையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு, நேரம் சரியாகி விடுகிறது. இதனால், வருவாய்த் துறைக்கு உண்டான அடிப்படைக் கணக்குகளை, செவ்வனே செய்ய இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆள் பற்றாக்குறை உள்ளது. எடுத்துக்காட்டாக, பத்து நபர்கள் பணிபுரிய வேண்டிய அலுவலகத்தில், ஐந்து அல்லது ஆறு நபர்கள் தான் உள்ளனர். ஆகவே, ஒவ்வொரு எழுத்தரும் தன்னுடைய சொந்த செலவில், தனி நபர்களைப் பணிக்கு அமர்த்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட எழுத்தர், கையூட்டு பெறுவதற்கு ஆளாக்கப்படுகிறார்.
பெரிய கிராமங்களுக்கு, கிராமக் கணக்குகளைப் பராமரிக்க, கூடுதல் கிராம அலுவலர் நியமிக்க, அரசு ஆவன செய்யவேண்டும்.ஊழல் குறைய வேண்டுமென்றால், மேல் மட்டத்திலிருந்து தான் வரவேண்டும். கீழ்மட்ட அலுவலர்களுக்கு, எந்த வித அலுவலகச் செலவும் நேரக் கூடாது.மேலும், பட்டா மாறுதல் செய்து பட்டா பெறுவதற்கு, புதிய முறை ஒன்றை அரசு அறிவித்துள்ளது. புதிய முறையினால், பெரிய நன்மை ஏற்படுமா என்பது சந்தேகம் தான்.
என் சிந்தனைக்கு உட்பட்டபடி, ஒரு விளக்கம் கொடுக்கிறேன்:பத்திரப் பதிவு அலுவலகத்தில், கிரையப்பத்திரம் பதிவு செய்யும் போது, பட்டா மாறுதல் மனுவும் சேர்த்துத் தான், பதிவு அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.அந்த பட்டா மாறுதல் மனுக்கள், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு, முறையாகச் சென்று, வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, அதன் பேரில் பட்டா மாறுதல் செய்துவிட்டால், பொது மக்களுக்கு எவ்வித அலைக்கழிப்பும் இல்லை; வீண் செலவும் இல்லை.
சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரும் விண்ணப்பங்கள், எஸ்.டி.ஆர்., என்றும், பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் ஆர்.டி.ஆர்., என்றும் வகைப்படும். அனைத்து எஸ்.டி.ஆர்., மனுக்களும் முறையாகப் பராமரித்து, பட்டா மாறுதல் செய்தால், மக்களின் பாராட்டு அரசுக்குக் கிடைக்கும்.
காணாமல்போன 'காலி'கள்!
காரணம், ஆட்சி மாறியதால், போலீஸ் ஸ்டேஷன்களில் கொஞ்சம், காட்சி மாறியுள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில், கரை வேட்டி கட்டி, பந்தா காட்டியவர்களை காணமுடிவதில்லை. கட்சி முகமூடிகளை போட்டு,'பஞ்சாயத்து' நடத்திய நாட்டாண்மைகள் ஓடிப் போய் விட்டனர்.போலீஸ் ஸ்டேஷன் முன் எப்போதும், கட்சிக் கொடி கட்டி கார்கள் நிற்பது விரட்டப்பட்டுள்ளது.கட்சி துண்டுகளைப் போட்டு, போலீஸ் துணையோடு, மக்களை துன்புறுத்திய கூட்டம், கூடாரம் காலியாகி உள்ளது.
எந்த பிரச்னை என்றாலும், சம்மன் இல்லாமல் ஆஜராகும், 'காலி'கள் காலியாகி உள்ளனர்.எனவே, இதே நிலையில் துறைசாராத, சம்பந்தம் இல்லாதவர்களை அணுகவிடாமல் காவலர்களும், அதிகாரிகளும் சகட்டு மேனிக்கு ஒருமையில் பேசுவதைத் தவிர்த்து, காட்டம் காட்ட வேண்டிய இடத்தில் காட்டிப் பழக வேண்டும்.போலீஸ் ஸ்டேஷன் வரும் அப்பாவிகளை அலைக்கழிக்காமல், மனித நேயத்தோடு, வழிகாட்ட வேண்டும்.ஆண்களோ, பெண்களோ வீடுகளிலும், வீதிகளிலும் சுதந்திரமாக, பயமில்லாமல், எந்த விதத்திலும் வன்முறைக்கு ஆளாகாமல் இருந்தால், வரும்காலத்தில் காவல் துறையையும், புதிய ஆட்சியையும், மக்கள் மனதார வாழ்த்துவர்.


