/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"கெடு' வந்ததால் தடுமாறும் அதிகாரிகள்:மாற்றிடம் கிடைக்காததால் அவதி"கெடு' வந்ததால் தடுமாறும் அதிகாரிகள்:மாற்றிடம் கிடைக்காததால் அவதி
"கெடு' வந்ததால் தடுமாறும் அதிகாரிகள்:மாற்றிடம் கிடைக்காததால் அவதி
"கெடு' வந்ததால் தடுமாறும் அதிகாரிகள்:மாற்றிடம் கிடைக்காததால் அவதி
"கெடு' வந்ததால் தடுமாறும் அதிகாரிகள்:மாற்றிடம் கிடைக்காததால் அவதி
ADDED : ஆக 11, 2011 11:37 PM
வால்பாறை : வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகம், காலி செய்ய கெடு விதித்துள்ள நிலையில், மாற்றிடம் கிடைக்காமல் அதிகாரிகள் பரிதவிக்கின்றனர்.வால்பாறை தாலுகாவில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு எஸ்டேட்களில் வசித்து வருகின்றனர்.
மின்வாரியம் சார்பில், வால்பாறை இரண்டாக பிரிக்கப்பட்டு, மின்பகிர்மானப் பணி நடந்து வருகிறது. வால்பாறையில் மின்வாரியத்துக்கு என சொந்தக் கட்டடம் இல்லாத நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக, வாடகைக் கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது; மாதந்தோறும் 4,850 ரூபாய் வாடகையாக செலுத்தப்படுகிறது. தற்போது செயல்படும் மின்வாரிய அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாற்றிடம் கிடைக்காததால், அலுவலகத்தை மாற்ற முடியாமல் அதிகாரிகள் பரிதவிக்கின்றனர்.இதனிடையே, வால்பாறை டவுன் பகுதியிலிருந்து 7 கி.மீ., தொலைவில், அய்யர்பாடி துணை மின் நிலைய அலுவலகத்தில் காலியிடமும், குடியிருப்பு வசதியும் உள்ளது. ஆனால், மின் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு, எஸ்டேட் பகுதி மக்கள் தொலைதூரம் சென்று புகார் கொடுக்க வேண்டியிருப்பதால், வால்பாறை டவுன் பகுதியிலேயே அலுவலகம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மின்வாரியத்துக்கென வால்பாறை டவுன் பகுதியில் சொந்தக் கட்டடம் இல்லாததால், வேறிடத்துக்கு மாற்ற முடியாத நிலையிலும், வாடகைக்கு இடம் கிடைக்காமலும் அவதிப்படுகிறோம். வருவாய் துறை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலியிடம் இருந்தாலும், மேற்படி இடத்தை, துறை வாரியாக மாற்றிப் பெறுவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி, வால்பாறை டவுன் பகுதியிலேயே அலுவலகம் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர். தனியாரில் தான் அதிகம்: வால்பாறை தாலுகாவில் 95 சதவீதம் இடம், தனியார் எஸ்டேட் வசம் உள்ளது; 5 சதவீதம் இடம் மட்டுமே அரசுக்கு சொந்தமானது. இதனால், வால்பாறையில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், வாடகைக் கட்டத்தில் தான் இயங்குகின்றன. குறிப்பாக, வால்பாறை டவுன் பகுதியிலேயே அனைத்து அரசு அலுவலகங்களும் அமைய வேண்டும் என்பதால், இடம் கிடைக்காத நிலையில், அரசு அலுவலகங்கள் கட்ட முடியாமல், தொடர்ந்து வாடகை கட்டடத்திலேயே செயல்படும் அவல நிலை வால்பாறையில் நீடித்து வருகிறது.


